Home நேர்காணல்கள் இரண்டே வருட போராட்ட வாழ்வு; கால்நூற்றாண்டு கடந்தும் தொடரும் சிறைவாழ்வு –...

இரண்டே வருட போராட்ட வாழ்வு; கால்நூற்றாண்டு கடந்தும் தொடரும் சிறைவாழ்வு – நேர்காணல்

26 வருடங்களாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் செல்லப்பிள்ளை மகேந்திரனின் கைதும், நீதிமன்ற தீர்ப்பும் மற்றும் அவரது வலிகள் நிறைந்த வாழ்க்கை தொடர்பில் மூத்த சகோதரியான செல்லப்பிள்ளை புஷ்பவதி இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணல்

கேள்வி:- மகேந்திரன் எப்படி கைது செய்யப்பட்டார்?

பதில்:- மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவாலய வீதி தான் எமது சொந்த இடம். 1993.09.27 அன்று, வந்தாறுமூலை மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றி வளைப்பினைச் செய்தார்கள்.  அதன் பின்னர் யாரோ ஒருவரை வைத்து அடையாள அணி வகுப்பினைச் செய்தனர். இதன்போது தான் மகேந்திரனை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கொண்டு சென்றனர்.

எங்களின் குடும்பத்தில் அம்மா, அப்பா, சகோதரிகள் நாங்கள் நால்வர், சகோதரர்கள் இருவர் ஆகியோரே உள்ளனர். மகேந்திரனை இராணுவம் கொண்டு சென்றவுடன் அவரை விடுவிக்குமாறு கோரி இராணுவ முகாம் வரையில் சென்று கதறி அழுதோம். அவர்கள் விசாரணையின் பின்னர் காவல் துறையினரிடத்தில் ஒப்படைப்பதாகவும் நாளை அனுப்புகின்றோம் என்றும் கூறினார்கள்.

ஆனால் இன்று வரையில் வீடு திரும்பவில்லை. தற்போது வரையில்  26 வருடங்களாக அவர் சிறையிலேயே உள்ளார். அம்மாவும், அப்பாவும் இறக்கும்வரையில் மகேந்திரன் வந்திட்டாரா என்று கேட்டக்கொண்டே இருப்பார்கள். இறுதியில் அவர்களும் அவரைக் காணாமலேயே உயிர் நீத்தார்கள்.

அப்பா 2008இலும் அம்மா 2015இலும் உயிர்நீத்தார்கள். அம்மா இறந்தபோது மட்டும் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்கு அவருக்கு அனுமதி கிடைத்திருந்தது. அப்போது மகேந்திரன் வந்திருந்தபோதும் எங்களுடைய முகத்தினை கூட நிமிர்ந்து பார்க்காது இருந்தார். அவருக்கான சொற்ப நேரம் நிறைவடைந்ததும் அவரை சிறை அதிகாரிகள் மீளவும் அழைத்துச் சென்று விட்டனர்.

கேள்வி:- அவர் மீது எத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன?107402241 mahendran 02 இரண்டே வருட போராட்ட வாழ்வு; கால்நூற்றாண்டு கடந்தும் தொடரும் சிறைவாழ்வு - நேர்காணல்

பதில்:- விசாரணை என்ற பெயரில் மகேந்திரனை அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர், தமக்குத் தேவையான வகையில் குற்றச்சாட்டுக்களை அடுக்கி, அவரது கையொப்பத்தையும் பெற்றுக்கொண்டனர். அதற்கமைய நீதிமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நாங்களும் பல்வேறு முயற்சிகளை செய்து மீட்க முயன்றோம். எங்களுடைய சொத்துகளை இழந்தாவது அவரை மீட்க சட்டத்தரணிகளை தேடி அலைந்தோம்.

எனினும் எம்மால் எதுவும் செய்ய முடியாது போய்விட்டது. அக்காலத்தில் எமக்கு கொழும்பு செல்வது முதல் அனைத்துமே பிரச்சினையாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாது தவித்தோம். எமது தவிப்பு ஒருபக்கம் இருக்கின்ற போது, 1994ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றினால் (வழக்கு எண் HC/6894/94) ஆயுட்காலச் சிறைத் தண்டனையும், அதற்கு மேலதிகமாக 50 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்தத் தண்டனைத் தீர்ப்பு அம்மா, அப்பா உட்பட அனைவரையுமே வெகுவாக பாதித்தது.

பிறகு அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று முயற்சிகளை எடுத்த போது கடவுள் பெயரால் சட்ட உதவி அமைப்பொன்று மகேந்திரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை மேன் முறையீடு செய்வதற்கு உதவியிருந்தது. CA190/95 என்ற எண்ணை கொண்ட வழக்கினை தாக்கல் செய்தது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றமானது, மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானதே என்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து அதே சட்ட உதவி அமைப்பானது, உச்ச நீதிமன்றத்தில் (SC(spl) LA No.165/2003)  என்ற இலக்கத்தினை கொண்ட மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஆயுட்காலச் சிறைத் தண்டனை சரியானதே என்றும், மேலதிகமாக வழங்கப்பட்டிருந்த 50 வருட சிறைத் தண்டனையினை, 10 வருட காலத்துக்குள் அனுபவித்து முடிக்குமாறும் இறுதித் தீர்ப்பளித்தது.

இப்போது மகேந்திரனுக்கு 46 வயதாகிறது. 26 வருடங்களாக சிறைச்சாலையிலேயே உள்ளார். அவருக்கு காசநோய், நீரிழிவு, மாரடைப்பு என பல நோய்களால் அன்றாடம் கஷ்டமான நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார். அவரை நாங்கள் பார்க்கச் செல்கின்றபோது நாம் கவலை அடைந்து விடக்கூடாது என்பதற்காக அவற்றை மறைத்தாலும் அவரின் நிலைமைகளை எம்மால் உணரமுடிகின்றது.

கேள்வி:- விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டிருந்தாரா?

பதில்:- நாங்கள் வளர்ந்ததெல்லாம் போர் சூழ்ந்த மட்டக்களப்பு மண்ணில் தான். அறியாத, தெரியாத 16 வயதில் தான் மகேந்திரன் விடுதலைப்புலிகளின் அமைப்பின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு சுமார் இரண்டு வருடங்கள் அவர்களுடைய பாசறைக்குள் இருந்தார்.

ஆனால் சிறுவனான மகேந்திரனை எந்தவொரு படையணி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தவில்லை. ஆயுதம் கூட மகேந்திரன் தரிக்கவில்லை. குறித்த அமைப்பின் அன்றைய கிழக்கு மாகாண தளபதியாக செயற்பட்டிருந்த கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பணிப்பின் பேரில், முகாமுக்குள் சிறு எடுபிடி வேலைகளையே செய்து வந்தார்.

எனினும், தொடர்ந்து அங்கிருக்க விரும்பாத மகேந்திரன் அவ்வமைப்பில் இருந்து முற்று முழுதாக விலகி தனது 18 ஆவது வயதில், வீட்டிற்கு வந்து கூலித்தொழில் புரிந்து அம்மாவிற்கு உதவியாக இருக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார். அவர் கைது செய்யப்பட்டபோது அவருக்கு 19 வயதாகியிருந்தது. திருமணம் செய்து சரியாக ஏழு நாட்களே நிறைவாகியிருந்தது. அத்துடன் அவரின் திருமண வாழ்வே முற்றுப்புள்ளியாகிவிட்டது.

கேள்வி:- தமிழ் அரசியல் வாதிகளிடத்தில் மகேந்திரனின் விடுதலை குறித்து பேசினீர்களா?

பதில்:- ஆம், நாம் கிழக்கு, வடக்கு ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு என அனைத்து அரசியல்வாதிகளிடத்திலும் மகேந்திரனின் விடயத்தினை கூறினோம். நேரடியாகவே சென்று பேச்சுக்களையும் நடத்தியிருந்தோம். ஆனால் இதுவரையில் எமக்கு எவ்விதமான தீர்வும் கிடைத்ததாய் இல்லை. அரசியல்வாதிகள் சிறைச்சாலைக்கு செல்கின்ற தருணங்களில் எல்லாம் மகேந்திரனை பார்த்து விட்டு எமக்கு அவரைப்பற்றி கூறுவார்கள். எனினும் மகேந்திரன் உட்பட சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலை சம்பந்தமாக தமிழ் அரசியல்வாதிகள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றே கருதுகின்றோம்.

கேள்வி:- அவருடைய விடுதலை தொடர்பில் அடுத்த கட்டம் என்ன நடவடி க்கைகளை எடுக்கவுள்ளீர்கள்?

பதில்:- உயர் நீதிமன்றத்தினால் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து எமக்குஎன்ன செய்வது என்று தெரியாத நிலையில் மகேந்திரனே தனக்கு அளிக்கப்பட்டுள்ள கடூழிய சிறைத்தண்டனை பற்றி குறிப்பிட்டடுள்ளார். அத்துடன் 12 ஆயிரம் விடுதலைபுலிகள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், தான் பணியாற்றிய கட்டளைத்தளபதியே சுதந்திரமாக வெளியில் இருக்கின்ற நிலையிலும் தான் பதின்ம வயதில் செய்த செயற்பாடுகள் தவறாக இருப்பின் அவற்றை தயவாக மன்னித்து விடுமாறு கோரியிருந்தார்.  மேலும் தன்னிடத்தில் அச்சுறுத்திப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொண்டு  பொதுமன்னிப்பில் விடுதலை அளிக்குமாறு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2017 ஆம் அண்டு கருணை மனுவொன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஊடாக அனுப்பியிருந்தார். ஆனால் அம்மனுவுக்கு கூட இதுவரையில் பதில் கிடைக்காத நிலையில் தான் இருக்கின்றோம்.

இந்நிலையில் நாம், அடுத்தகட்டமாக என்ன செய்வதென்று தெரியாது சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம். தன்னைக் கொலை செய்ய வந்த நபருக்கே மன்னிப்பளித்த சனாதிபதி 26வருடங்களாக இளமையை, உறவுகளை தொலைத்து நோய்வாய்ப்பட்டு எஞ்சிய ஆயட்காலத்தினை குடும்பத்தினருடன் கழிக்க விரும்பும் மகேந்திரனுக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று கோரி இறைவனை பிரார்த்திப்பதை தவிர எம்மால் என்ன செய்ய முடியும்.

Exit mobile version