இரண்டாவது அலையை ஆரம்பித்த கொரோனா வைரஸ் – தடுமாறும் நாடுகள்

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது வைரஸ் அலை போல மீண்டும் பெருந்தொற்று தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

ஸ்பெயினின் வடகிழக்கு பிராந்தியமான கேட்டலோனியாவில் வியாழக்கிழமை முதல் மதுபான விடுதிகள், உணவகங்கள் 15 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்கள் கூடும் பொது இடங்களில் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று ஆட்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்பெயினில் புதன்கிழமை நிலவரப்படி 8 லட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

செக் குடியரசு நாட்டில் பள்ளிகள், மதுபான விடுதிகள் மூடப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் பொதுமக்கள் கூடும் உணவகங்கள், தேனீரகங்கள் மூடப்பட்டுள்ளன.