Tamil News
Home செய்திகள் இரட்டை நிலைப்பாட்டில் அரசு; ஐ.நாவில் முறையிடவேண்டும் – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

இரட்டை நிலைப்பாட்டில் அரசு; ஐ.நாவில் முறையிடவேண்டும் – சிவாஜிலிங்கம் வலியுறுத்தல்

அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படுகின்றது என்பதன் வெளிப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதியை நிராகரித்து தொற்று நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சரும், கொரோனா கட்டுப்பாட்டு விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே எதிர்க்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் முறையிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“இதுமட்டுமன்றி தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயம் தொடர்பில் பல தடவைகள் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட போதும், அதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகமோ, பிரதமர் செயலகமோ உத்தியோகபூர்வமான அறிக்கையை வெளியிடவேண்டும்.

இனியும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுமானால் அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை உறுதிப்படுத்தப்படும். எவ்வாறாயினும் இத்தகைய விடயங்களில் நாம் ஒருமித்து செயல்பட வேண்டும். அதேவேளை அரசின் இரட்டை நிலைப்பாட்டுக்கு எதிராக பொது அமைப்புக்களும், பாராளுமன்றப் பிரதிநிதிகளும் குரல் கொடுக்கவேண்டும்.

உடனடியாக ஜனாஸா எரிப்புத்திட்டத்தை கைவிடவேண்டும். இல்லை என்றால் அனைத்து முஸ்லிம் கட்சிகளும், தமிழ்க் கட்சிகளும் இணைந்து முஸ்லிம் நாடுகளிடம் முறையிடுவதோடு எமது மத உரிமைகள் மீறப்படுகின்றன எனவே இவற்றைச் சுட்டிக்காட்டி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முறையிடவேண்டும்.

ஏற்கனவே இவ்விடயம் ஐ.நாவில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் அரசாங்கம் செவிசாய்க்காது விட்டால் அனைத்து இன மக்களும் ஒருமித்து அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.

Exit mobile version