Home செய்திகள் இயற்கை வழி விவசாயத்தை நோக்கி மக்களை நகர்த்த முயற்சிக்கிறோம் – குலசிங்கம் வசீகரன்

இயற்கை வழி விவசாயத்தை நோக்கி மக்களை நகர்த்த முயற்சிக்கிறோம் – குலசிங்கம் வசீகரன்

இயற்கை விவசாயம் பரவலாக தமிழர் தாயகப் பகுதிகளில் அதன் முக்கியத்துவம் கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  (OMNE – Organic Movment North East) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  செயற்பட்டு வரும் இயற்கை வழி இயக்கம் என்ற அமைப்பின் செயற்பாட்டாளர் குலசிங்கம் வசீகரன் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி…

கேள்வி-

 இயற்கை வழி இயக்கத்தின் தோற்றம், இவ்விடயம் தொடர்பாக தங்கள் ஈடுபாட்டின் காரணம் என்பவற்றை அறியத்தர முடியுமா?

பதில் –

இந்தக் கேள்வியை கடந்த நான்கு ஆண்டுகளில் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். ‘விவசாயத்துறையோடு தொடர்புபடாத ஒருவன் எவ்வாறு இயற்கை விவசாயம் பற்றி பேசுகிறான்’ என்ற யோசனை மற்றவர்களுக்கு தோன்றியதால் இந்தக் கேள்வி அவர்களுள் எழுந்திருக்கலாம் என்று எனக்குள் நானே பதில் சொல்லிக் கொண்டேன்.

IMG 8275 இயற்கை வழி விவசாயத்தை நோக்கி மக்களை நகர்த்த முயற்சிக்கிறோம் -	குலசிங்கம் வசீகரன்

இயற்கை சார்ந்த ஈடுபாடு, அறிவு தெரிந்த நாள் முதல் என்னுள் இருந்தது. மரங்கள், செடிகள், பறவைகள் மீது என்னுடைய தாயரின் ஈடுபாடு என்னுள்ளும் தொற்றிக் கொண்டது. இருவருமாக செவ்வரத்தை மரங்களில் பலவர்ண ஒட்டு கிளைகளை உருவாக்கி ஒரே மரத்தில் பலவர்ண செவ்வரத்தை பூக்களை பூக்க வைத்திருக்கிறோம். அப்போது எனக்கு வயது எட்டோ ஒன்பது. இப்படியாக என்னுள் இருந்த இயற்கை மீதான ஈடுபாடு கடந்த 2018ஆம் ஆண்டு தமிழகத்தில் இருந்தும் வந்திருந்த இயற்கை விவசாயிகள் நடாத்திய இயற்கை விவசாய கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளின் பின்னர் இன்னும் வலுப்பெற்றது.

‘புதிய வெளிச்சம்’ என்ற தலைப்பில் இலங்கையின் வடபகுதியில் கல்விசார் கருத்தரங்குகள் மற்றும் இயற்கை விவசாய கருத்தரங்குகளை நடத்த வல்வெட்டித்துறையை சேர்ந்த, தற்போது கனடாவில் வாழும் நண்பர் அனந்தராஜ் நவஜீவன் எனது ஒத்துழைப்பை கேட்டிருந்தார். அதன்படி அவரது ஒத்துழைப்போடு அவரது எண்ணத்துக்கு நான் செயல் வடிவம் கொடுத்தேன்.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான இருவார காலமும் இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் இயற்கை விவசாய கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளை நடத்தியிருந்தோம். தமிழகத்தில் இருந்து இயற்கை விவசாய வல்லுநர்களான திரு பாமயன், திரு சுந்தர்ராமன், திரு சதுரகிரி, திரு ரவி மற்றும் திரு கஜன் ஆகியோர் வருகை தந்திருந்தார்கள். அதேபோல ஈழத்தில் காரைநகரைச் சேர்ந்த, சுவீடன் நாட்டில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக கடமையாற்றி, தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் பேராசிரியர் நடராஜா சிறீஸ்கந்தராஜா அவர்களும் பேராசிரியர் திருமதி சிறீதேவி சிறீஸ்கந்தராஜா அவர்களும் வந்திருந்தார்கள்.

முழுநாள் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் இயற்கை விவசாயம் சார்ந்தும், அதில் உள்ள நன்மைகள் பற்றியும், இயற்கை வழி அற்ற விவசாய முறைகளால் நாம் உண்ணும் உணவே நஞ்சாக மாறியுள்ளது பற்றியும் பல தகவல்களை அறியக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. பல்வேறு இடங்களில் முன்னரே கேள்விப்பட்டிருந்தாலும், விபரமாக அறிந்த போது, எமது பிள்ளைகளுக்காவது நஞ்சற்ற உணவை வழங்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியது. அதேபோல கருத்தரங்குகள் முடிவில் இயறக்கை வழி இயக்கமும் தோற்றம் பெற்றது.

ஆரம்பத்தில் நாங்கள் இயற்கை முறையில் விவசாயம் என்று பேசிய போது பலரும் பெரிய அளவில் ஆர்வம் கொள்ளவில்லை, ஆனால் இந்த நான்காவது ஆண்டின் தொடக்கத்தில் ஏறக்குறைய முழு உலகமும் இயற்கை விவசாயம் பற்றியும், எமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வோம் என்றும் பேசிக்கொண்டிருக்கிறது.

கேள்வி-

 கடந்த நூற்றாண்டில் எமது பாரம்பரிய விவசாயம் எவ்வாறு சீர்குலைக்கப்பட்டது. அதனால் எம்மண்ணும், எம் வாழ்வும் எவ்வாறு சிதைந்து போயின என்பதை ஆதாரங்களுடன் எம் மக்களுக்கு எடுத்துக் கூற முடியுமா?

பதில்-

கடந்த காலங்களில் எமது முன்னோர்கள் எவ்வாறு நோய்நொடி இன்றி வாழ்ந்தார்கள் என்று மக்களுக்கு எடுத்துக்கூறினாலே போதும், அது எவ்வாறு மாறிப்போனது என்பதை அவர்களே தெரிந்து கொள்வார்கள். காட்டிலே வாழ்ந்த மனிதனும் பூரண உணவை தான் உண்டான், அந்த உணவே அவனுக்கு மருந்தாகவும் இருந்தது, இன்று நாம் நோய் தரும் உணவை தெரிந்தே உண்கிறோம், அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் இப்போது மக்கள் தாம் உண்ணும் உணவை பற்றிய புரிதலை கொண்டிருக்கிறார்கள் என்றே நான் கருதுகிறேன். மக்கள் மருந்தடிக்காத மரக்கறிகளை தேடிவாங்க தொடங்கியிருக்கிறார்கள், வீட்டுத் தோட்டங்களை அமைக்கிறார்கள். மூலிகைத் தாவரங்களை வீட்டில் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இந்த மாற்றங்களை விரிவடையச் செய்வதே எமது நோக்கமாக இருக்கிறது.

கேள்வி-

 இவ் அழிவுகளிலிருந்து எம்மை மீட்டெடுக்கும் வழி வகைகள் எவை என கருதுகிறீர்கள்?

இயற்கைக்கு முரணாக என்னவெல்லாம் நாம் செய்கிறோமோ, அவை எல்லாவற்றையும் மீட்டுத்தரும் வல்லமை இயற்கை ஒன்றுக்கே உண்டு. அசேதன பூச்சிக்கொல்லிகள், ஊக்கிகள் என்பவை பாவித்த நிலத்தை மீண்டும் அசேதன மருந்துகள் பாவித்து விவசாயத்துக்கு உகந்த நிலமாக மாற்றிவிட முடியாது. மருந்து பாவித்து விவசாயம் செய்யலாம், அவ்வாறு செய்யும் விவசாயத்தின் விளைவு முழு நஞ்சாகவே இருக்கும், குழந்தைக்கு நஞ்சை தாய்ப்பாலோடு ஊட்டுவது போன்றது அது. ஆனால் விளையாத நிலத்தை, இயற்கை முறையில் சிறந்த விளைச்சலைக் கொடுக்கும் நிலமாக மாற்றும் ஆற்றல் இயற்கை வழியில் உண்டு.

கேள்வி-

பொருண்மிய இலக்கு, மட்டுப்படுத்தப்பட்ட நில, நீர்வளம், அதிகரித்த மக்கள் தொகை என்பவற்றுக்கேற்ப இயற்கை விவசாய உற்பத்தித் திறனால் ஈடு கொடுக்க முடியாது எனும் கருத்துக்கு உங்கள் பதிலென்ன?

பதில் –

அதிகம் கூறவேண்டியதில்லை, கடந்த ஆண்டு கொரோனா என்னும் பெருநோய் உலகை உறைந்து போகவைத்த சில மாதங்களில் பல இடங்களில் வளிமாசு மிகப்பெரியளவில் குறைவடைந்திருந்தது. சூரியனிலிருந்து வரும் மனித உடலுக்கு தீங்கிழைக்க கூடிய புறஊதாக் கதிர்களை பூமிக்கு வர விடாமல் தடுக்கும் ஓசோன் படலத்தில் இருந்த ஓட்டை கூட அடைபட்டு விட்டதாக கூறப்படுகிறது. இவையெல்லாம் நாம் ஓரிரு மாதங்களை இயற்கைக்கு ஊறுசெய்யாமல் இருந்ததால் வந்த நன்மைகள், அப்படியென்றால், நாம் முழுவதுமாக இயற்கையை அரவணைத்து வாழ்ந்தால், நீர்வளம் பெருகும், நிலம் கொழிக்கும், பொருண்மியம் உச்சம்தொடும். மக்கள் தொகைக்கு ஏட்ப விவசாயம் கூடும். இயற்கையை விடுத்து நீரை, உணவை நாம் வேறு எந்த வகையிலும் பெற்றுக்கொள்ள முடியாது.

கேள்வி –

 இயற்கை விவசாயம் எங்களை காக்கும் என்பதை விஞ்ஞான விளக்கங்கள், புள்ளிவிபர கணிப்புகளுடன் விளக்க முடியுமா?

பதில் –

இயற்கை எம்மை காக்கும் என்பதை யாருக்கும் விஞ்ஞான ரீதியாகவோ, புள்ளி விபரங்களினூடாகவோ நிரூபிக்க வேண்டியதில்லை என்பதை காலம் கற்பித்துள்ளது. அப்படி நிருபிக்க வேண்டுமென்றால், அது பல்கலைக்கழகங்களின் கடமை, நாங்கள் மக்களோட இயங்குபவர்கள், மக்களுக்கு புரியும் மொழியில் , பாமர மக்களின் வழியில், அனைவருக்கும் விளங்கும் வகையில் கூறுகிறோம். எமது பாட்டன், பூட்டன் உள்ளிட்டோரும் விவசாயிகள், அவர்கள் அனைவரும் சராசரி தொண்ணூறு வயதுவரை வாழ்ந்திருக்கிறார்கள். அவ்வாறிருக்க எமது சந்ததி சராசரி அறுபது வயதுவரை மட்டுமே வாழ்கிறது. நாற்பது வயதுக்குள்ளேயே தொடர் மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்லவேண்டியிருக்கிறது. ஏன் இந்த வேறுபாடு என்றால், எமது பட்டன் பூட்டனின் உணவு முறைக்கும், எமது சந்ததியின் உணவு முறைக்கும் உள்ள வேறுபாடே காரணம். இதனால் தான் நாங்கள் பாட்டன், பூட்டன் செய்த இயற்கை வழி விவசாயத்தை நோக்கி மக்களை நகர்த்த முயற்சிக்கிறோம்.

இயற்கையை இயற்கையாக மனிதன் எடுத்துக்கொண்டு வாழவேண்டும். இயற்கையை செயற்கையாக மனிதன் எடுத்துக்கொண்டுவிடக் கூடாது. அதாவது இயற்கை விவசாயத்தை விவசாயி செய்யவேண்டும், வியாபாரி அல்ல.

 

 

Exit mobile version