இயற்கை சீற்றத்தால் கீழடி அழிவுற்றிருக்குமா? – ஆய்வுகள் தொடங்கின

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம்கட்ட அகழாய்வுகள் தமிழக தொல்லியல்துறையினர் சார்பில் நடைபெற்று வருகின்றன. இதுவரை நடைபெற்ற ஆய்வில் பல பழமையான பொருட்கள் பல மீட்கப்பட்டன. பானைகள், வடிகால் அமைப்பு குழாய்கள், தங்க நாணயங்கள், எடைக் கற்கள், மனித எச்சங்கள் போன்ற பல பொருட்கள் இங்கு மீட்கப்பட்டுள்ளன.

இவை 2600 ஆண்டுகள் பழமை வாய்தவை என கண்டறியப்பட்டுள்ளதுடன், இவற்றை உறுதிப்படுத்தும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு கிடைத்த பொருட்கள் சங்ககால தமிழர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்ததை நிரூபிக்கின்றன. இங்கு வாழ்ந்த மக்கள் எங்கு சென்றார்கள், இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் என்ன என அறிவதற்காக, நிலவியல் துறை ஆய்வாளர்கள் மூலம் ஆய்வுப் பணிகள் நேற்றுத் தொடங்கியுள்ளன.

டேராடூன் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிலவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் ஜெயம்கொண்ட பெருமாள் தலைமையில் இரு ஆராய்ச்சிக் கல்லூரி மாணவர்களுடன் நேற்று ஆய்வுப் பணிகள் தொடங்கின. இதற்காக கீழடியிலுள்ள நிலப்பரப்பிலிருந்து 13 மீற்றர் ஆழம் வரை பல்வேறு இடங்களில் மண் அடுக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை வைத்து கீழடி நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

இந்த ஆய்வின் மூலம் இந்த நகரம் அழிந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும், கீழடி பகுதி கடல் உள்வாங்கியதால் அழிந்திருக்குமா, அல்லது சுனாமி போன்றவற்றால் அழிந்திருக்குமா, மக்கள் இடம்பெயர்ந்ததால் அழிந்திருக்குமா என ஆய்வு செய்யவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக கீழடியில் சர்ஃபேஸ் ஸ்கானர் என்ற நவீன லேசர் கருவி மூலம் அகழாய்வுப் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. இந்த லேசர் கருவிகள் தரை மட்டத்திலிருந்து 500 மீற்றர் ஆழத்திற்கு ஊடுருவி, கீழே பழங்கால கட்டிடங்கள், பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்யும் திறன் கொண்டவை.

இதேவேளை வரும் செப்டெம்பர் இறுதியுடன் ஆறாம்கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு பெற்று, எதிர்வரும் ஜனவரியில் 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.