இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது: அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங் 

“எமது இனத்தின் மேல் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்ற இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது” என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு கிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்  குறிப்பிட்டுள்ளார்.

யாழ் நுாலகம் எரிப்பு குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு இனத்தை அழிப்பதாயின் அதனை ஒரு கட்டமைக்கப்பட்ட  இன அழிபாடுகளின் செயற்பாடுகள் ஊடாகத்தான்   முழுமையாக அழிக்க முடியும். இதைத்தான் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு தமிழர்களுடைய பெரும் சொத்தாக கல்வியினுடைய பெரும் எடுப்பாக இருந்த எமது யாழ் நூலகம் அந்நாட்களில் ஆட்சியில்  இருந்தவர்களால் எரித்தூட்டப்பட்டது. அதை கேள்வியுற்ற அருட்தந்தை தாவீது அடிகளார் மரணமடைந்தார் என்கின்ற செய்தியை நாங்கள் அறிகிறோம்.

பத்திரீசியர் கல்லூரியினுடைய முன்னைநாள் அதிபர் மறைந்த லோன் அடிகளார் அவருடைய பெரும் நிதி பங்களிப்பிலே அந்த நூலகம் உருவாக்கப்பட்டது. தமிழினத்தினுடைய பெரும் சொத்தாக கணிக்கப்பட்ட அந்த நூலகம் அந்நாட்களில் ஆட்சியில் இருந்தவர்களால் எரியூட்டப்பட்டது. அதை ஒட்டி, பல பிரதேசங்கள் இந்த இன அழிப்பின் அடையாளங்களாக காணப்பட்டன. இந்த நாற்பது ஆண்டு காலத்திற்கு முன்பு அழிக்கப்பட்ட இந்த நூலகத்தினுடைய அழிவின் விளிம்பிலே நின்று நாங்கள் பார்க்கிற போது  அன்று எமது இனத்தின் மேல் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்ற இன அழிப்பு  அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது.

இதைத்தான் நாங்கள் அண்மையிலே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலே நாங்கள் பார்க்கக்கூடியதாக இருந்தது. மகாவலியின் அவிருத்தியின் ஊடாக காணக்கூடியதாக இருக்கிறது. இந்து ஆலயங்கள் இருந்த பாரம்பரிய இடங்கள் பௌத்த ஆலயங்களாக்கப்பட்டு கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலைகளை எல்லாம் அவதானிக்கிறோம். தொடர்ந்து எமது தமிழர் பிரதேசத்திலே சிங்கள குடியேற்றங்களை கொண்டு வந்து உருவாக்குவதன் வழியாக இந்த கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிற கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு சங்கிலி, தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. ஆகவே, இதற்கு எதிராக, தமிழர்கள் நாங்கள் விழித்தெழ வேண்டும். இதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டிய கட்டாய தேவையிலே நாம் இருக்கிறோம்” என்றார்.