இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் ஸ்டாலினிடமிருந்து கிடைக்கும் – விக்கி நம்பிக்கை

“இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் ஸ்டாலின் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும், இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத் தமிழர்களுக்கான உரிமையையும் பெற்றுத்தருவதற்கு தமிழகத்திலிருந்து வலுவான குரல் ஒலிக்கும் என்றும் நாம் நம்பிக்கை கொள்கின்றோம்” யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கி முதல் தேர்தலிலேயே சரித்திர வெற்றியை பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு எமது தமிழ் மக்கள் சார்பாக எனது மனநிறைவான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ஆறாவது முறையாக தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க உள்ள திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புக்கள் அனைவருக்குமே வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சியில் தமிழகம் பல்வேறு துறைகளில் மேன்மேலும் வளர்ச்சி அடையும் என்றும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழும் என்றும் நான் உறுதியாக நம்புகின்றேன்.

2009ஆம் ஆண்டு தமிழ் ஈழப்பரப்பில் இடம்பெற்ற கொடூரமான இனவழிப்பின் தொடர்ச்சியாக இன்றுவரை தமிழர் பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக அது தொடருகின்றது. இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் ஸ்டாலின் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும், இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத் தமிழர்களுக்கான உரிமையையும் பெற்றுத்தருவதற்கு தமிழகத்திலிருந்து வலுவான குரல் ஒலிக்கும் என்றும் நாம் நம்பிக்கை கொள்கின்றோம்.

அதேபோல, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் மிகவும் நெருக்கமான உறவினை ஏற்படுத்துவதற்கும் ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழக அரசாங்கம் காத்திரமான பல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.”