இனப் படுகொலையை ஏற்றுக்கொண்டது யேர்மனி

காலனித்துவக் காலத்தில் நமீபியாவில் மேற்கொண்ட படுகொலைகளை இனப் படுகொலைகளாக யேர்மன் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

100 வருடங்களுக்கு முன்னர் ஹெரிரோ மற்றும் நமா ஆகிய இன மக்களுக்கு எதிராக இந்த இனப் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த இனப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு 1.3 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக யேர்மனின் வெளிவிவகார அமைச்சர் ஹெகோ மாஸ் கடந்த வெள்ளிக் கிழமை (28) தெரிவித்துள்ளார்.

1904 ஆம் ஆண்டில் இருந்து 1908 ஆம் ஆண்டு வரையில் இடம்பெற்ற சம்பவங்களை யேர்மன் அரசு இனப் படுகொலையாக ஏற்றுக் கொண்டது நல்லிணக்கப்பாட்டுக்கான சந்தர்ப்பம் என நமீபிய அரச தலைவரின் ஊடகச் செயலாளர் அல்பிரடோ ஹெங்காரி தெரிவித்துள்ளார்.

இந்த இனப் படுகொலையை மக்கள் மறக்கப் போவதில்லை, எனினும் காயங்களை ஆற்றும் முக்கிய நடைவடிக்கை இதுவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காலனித்துவத்திற்கு எதிராக போராடிய ஏறத்தாழ 80,000 மக்களை யேர்மன் படையினர் படுகொலை செய்திருந்தனர். யேர்மனியின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக அவர்கள் போரடியிருந்தனர். இழப்பீடு வழங்குவது தொடர்பில் இரு நாடுகளும் 2015 ஆம் ஆண்டு பேச்சுக்களை ஆரம்பித்திருந்தன. 2004 ஆம் ஆண்டு யேர்மனி தனது நடவடிக்கை தொடர்பில் முதலில் மன்னிப்புக் கோரியிருந்தது.

இதனிடையே, 1994 ஆம் ஆண்டு றுவாண்டாவில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கான பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இங்கு இடம்பெற்ற சம்பவத்தில் 800,000 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

முதலாம் உலகப் போரின் போது ஆர்மேனியாவில் இடம்பெற்ற படுகொலைகள் ஒரு இனப் படுகொலை என்பதை அமெரிக்க அதிபர் பைடன் ஏற்றுக் கொண்டதுடன், கடந்த வாரம் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். அங்கு ஏறத்தாழ 1.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.