Tamil News
Home செய்திகள் இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது

இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது

இலங்கை இராணுவம் போர் விதிமுறைகளை மீறியுள்ளமை தொடர்பாக நீதி கேட்கும்  தமிழர் தரப்பு,  அந்தக் குற்றங்களைப் புரிந்தவர்கள் மாணவர்களுக்கு பயிற்சியை வழங்குவதை ஏற்றுக்கொள்வது, குற்றம் இழைத்தவர்களை நாமே பிணை எடுப்பதற்கு நிகரானதாகும் என முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணி செயலாளருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கட்டாயமாக 18 வயதுக்கு மேற்பட்டோர் இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்று வைஸ் அட்மிரல் சரத் வீரசேகர  அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வைஸ் அட்மிரல் சரத் வீரசேகராவின் இந்த அறிவிப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சபா குகதாஸ், “இலங்கை அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறிய 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இராணுவப் பயிற்சி, இந்த நாட்டின் தமிழ் சிங்கள மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்படாமல் தொடர்ந்தும் சந்தேகங்கள், முரண்பாடுகள், பரஸ்பரம் இனங்களிடையே உரிமைகளை பகிர்ந்து கொள்ளாமை, போர்க்குற்றங்கள் மனிதப் படுகொலைக்கான நீதி நியாயங்கள் கிடைக்கப் பெறாத வரை இராணுவ பயிற்சியை தமிழர் தலைமைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் இன ரீதியாக பாரிய ஆபத்துக்களை உருவாக்கும்.

இலங்கை அரசாங்கம் கட்டாயப்படுத்தலில் இராணுவ பயிற்சியை மாணவர்களுக்கு வடக்கு கிழக்கில் கொடுப்பது வேறு. அதனை தமிழர் தரப்பு தலைமைகளின் ஆதரவுடன் கொடுப்பது இனத்தின் நீதிக்கான பயணத்தில் பின்னடைவை உருவாக்கும்.

இலங்கை இராணுவம் போர் விதிமுறைகளை மீறியுள்ளமை தொடர்பாக நீதி கேட்கும்  தமிழர் தரப்பு, அந்த குற்றங்களை புரிந்த இராணுவ தளபதியே பொறுப்பாக இருக்கும் போது, இந்த இராணுவத்தை வழி நடாத்திய ஆட்சியாளர்களே ஆட்சிக் கதிரையில் இருக்கும் போது அவர்களின் பயிற்சியை நாமே ஏற்றுக் கொள்வது குற்றம் இழைத்தவர்களை நாமே பிணை எடுப்பதற்கு நிகரானதாகும் இங்கு தான் தமிழர்களுக்கு ஆபத்து உருவாகிறது.

இராணுவப் பயிற்சி தலைமைத்துவ பண்புகளை, நன் நடைத்தைகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் அப் பயிற்சி கொடுக்கும் தரப்பிடம் அவ்வாறான எண்ணம் உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும்.

முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் விசாரணையில் சந்தேக  கண் கொண்டு புலனாய்வார்களின் கிடுக்குப் பிடியில் வைத்திருக்கும் இராணுவ இயந்திரத்திடம், தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கையை ஒரு நிகழ்ச்சி நிரலாக செய்யும் அரசாங்கத்திடம், தென்னிந்திய தமிழர்களின் ஆதரவு ஈழத் தமிழர்கள் பக்கம் இருப்பதை பொறுத்துக் கொள்ளாமல் தமிழக மீனவர்களை ஈவிரக்கம் அற்ற வகையில் கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்திடம் நல்லெண்ண வெளிப்பாடுகளை எதிர்பார்க்க முடியுமா? தமிழர் தலைவர்கள் நிதானமான முடிவுகளை கருத்துக்களை முன் வைப்பதுடன், தமிழர் தேசம் பலம் இழக்கும் நிலைக்கு பாதை அமைக்கக் கூடாது” என்றார்.

Exit mobile version