Tamil News
Home செய்திகள் இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது உலகத்தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி – தோழர் தியாகு

இனப்படுகொலையை தடுக்க முடியாது போனது உலகத்தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வி – தோழர் தியாகு

முள்ளிவாய்க்கால் இனக்கொலையைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்பது ஈழத் தமிழர்களின் தோல்வி மட்டுமன்று, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வியாகும் என தோழர் தியாகு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இராசபட்சே தலைமை யிலான சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனக்கொலைப் போர் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டு பல்லாயிரம் தமிழ்மக்கள் துள்ளத்துடிக்கக் கொல்லப்பட்ட அவலம் நிகழ்ந்து பத்தாண்டு நிறைவு பெறுகிறது.

இந்த இனக்கொலையைத் தடுக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை என்பது ஈழத் தமிழர்களின் தோல்வி மட்டுமன்று, தமிழகத் தமிழர்கள் உள்ளிட்ட உலகத் தமிழினத்தின் வரலாற்றுத் தோல்வியாகும். தமிழின அழிப்புக்கு நீதி கோரும் போராட்டம் ஐநா மன்றத்திலும் பன்னாட்டு அரங்கிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அனைத்துக்கும் மேலாகத் தமிழீழத் தாயகத்தில் சிங்கள இராணுவ வல்லிருப்பையும் மீறித் தமிழீழ மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஐநா மாந்தவுரிமைப் பேரவையில் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒப்புக்குச் சில தீர்மானங்களும் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இனவழிப்புக் குற்றத்துக்காகவோ, போர்க் குற்றங்களுக்காகவோ இது வரை ஒரே ஒருவர் கூடக் கூண்டிலேற்றப்படவில்லை.

அது மட்டுமன்று, நடந்தது இனவழிப்பு என்பதை உலக நாடுகளில் ஒன்று கூட ஏற்றுக் கொள்ளவில்லை. இனவழிப்புக் குற்றத்துக்காகச் சிங்கள அரசை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்கும் வரை நமக்கு ஓய்வில்லை.

தமிழினத்தின் உரிமைக் குரலை முள்ளிவாய்க்காலில் மூழ்கடிக்கும் சிங்கள அரசின் முயற்சி தோற்று விட்டது. மறுபுறம், தமிழீழ விடுதலைக் குறிக்கோளை மடைமாற்றும் அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கும் முயற்சியும் தோற்று விட்டது. இருபெரும் சிங்களக் கட்சிகளும் சேர்ந்து உருவாக்கிய தேசிய அரசு, நல்லாட்சி அரசு எல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டன.

புதிய அரசமைப்புச் சட்டத்தின் ஊடாக சமஷ்டித் தீர்வு அல்லது அது போன்ற ஒன்று என வாயளந்து கொண்டிருந்த நாடாளுமன்றத் தமிழ்த் தலைமையின் கனவு கலைந்து விட்டது. இழந்த நிலத்தை மீட்கவும், போர்க் கைதிகளின் விடுதலைக்காகவும், காணாமல் போன உறவுகளைக் கண்டுபிடிக்கவும், இனவழிப்புக்கு நீதி கோரியும் தமிழீழ மக்களின் போராட்டம் ஓய்ந்துவிடவில்லை.

தமிழீழ மக்களின் மறுபகுதியான புலம்பெயர் தமிழர்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முதலான புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் நடத்திவரும் போராட்டமும் ஓய்ந்துவிடவில்லை, ஈழத் தமிழர்களோடு தோழமை கொண்டு தமிழகம் நடத்தி வரும் போராட்டமும் ஓயப் போவதில்லை. இனவழிப்புக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் போதாது. இனவழிப்பின் வேராகிய இன ஒடுக்குமுறை களையப்பட வேண்டும். அதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஒருமித்த கோரிக்கை.

இந்தப் பொதுவாக்கெடுப்பு வழியாகத் தமிழீழம் மலரும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். முள்ளிவாய்க்காலில் விதைந்த உயிர்கள் விடுதலையாக விளைவதே வரலாற்று ஏரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version