இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாக வேண்டும்-செல்வம் எம்பி

இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாக வேண்டும் அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ரெலோவின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடக்கு கிழக்கில் இலங்கை அரசாங்கம் ஒரு மோசமான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது.மாகாண சபையின் அதிகாரங்களை பறித்து, நிலங்களை அபகரித்து பூர்வீகத்தை சிதைக்கும் செயற்பாட்டை இலங்கை அரசு முன்னெடுத்து வருகின்றது. அது எமது மக்களிடத்திலும், மண்ணிலும் ஒரு அபாயகரமான நிலைமையை உண்டுபண்ணி கொண்டிருக்கின்றது.  இதற்கு நாம் தடைபோடவில்லை என்றால் நிச்சயமாக இராணுவ அடக்குமுறையினூடாக எமது தேசத்தின் வரலாற்றை சிதைக்கும் செயற்பாட்டினை அவர்கள் செய்து முடிப்பார்கள்.

அதனை முறியடிக்க வேண்டும் என்றால் எங்களுக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமையினை வலியுறுத்தி சில கட்சிகளிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தோம்.

குறிப்பாக மாவை சேனாதிராஜா மற்றும். சித்தார்த்தன் ஆகியோர் அதற்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர். சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் ஐயா ஆகியோர் தமது ஆர்வத்தினை தெரிவித்திருந்தாலும் கூட வேறு சிலரையும் உள்வாங்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் முன் வைத்திருக்கின்றார்கள்.  கயேந்திரகுமார் தனது பதிலை அறிவிக்கவில்லை. ஆயினும் இந்த அணியில் அவர் தொடர்ந்து செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன்.

யாரை அழைப்பது என்றவிடயம் தொடர்பாக நாம் அனுப்பிய கடிதத்தில் சில தவறுகள் இருப்பதை குறிப்பிட வேண்டும்.  எந்தக்கட்சியினை சார்ந்தவர்கள் என்ற விடயத்தினை நாம் பார்க்கவில்லை. விடுபட்டவர்கள் அழைக்கப்பட வேண்டும் என்பதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம். எமது இனத்தையும் மண்ணையும் காப்பதற்கான ஒற்றுமை வலுவாகவேண்டும். அதற்கு தமிழீழ விடுதலை இயக்கம் எந்தவிதமான விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றது” என்றார்.