இந்திய விவசாயிகள் போராட்டம் 120 நாட்களை எட்டியது; நாளை நாடு தழுவிய முழு அடைப்பு

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 120வது நாளை எட்டியுள்ளது. இதனையொட்டி நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு  விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்றுடன் 120வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் 4 மாதங்களை நிறைவு செய்துள்ளதைத் தொடர்ந்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக  சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சங்கத் தலைவர் தர்ஷன் பால் வெளியிட்ட அறிக்கையில், “நாடு தழுவிய அளவில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். காலை  6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில், பேருந்துகள், ரயில்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் என அனைத்து இயக்கமும் நிறுத்த வேண்டும். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு  அளித்து நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.