இந்திய விவசாயிகள் போராட்டம் – ஐ.நா அறிவுரை

இந்திய விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையம் இரு தரப்பும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையம் தனது ருவிட்டர் பக்கத்தில், நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் அதிகாரிகளும் போராடுபவர்களும் அதிகபட்ச பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும். அமைதியான முறையில் கூடுவது, கருத்தை வெளிப்படுத்துவதற்கான உரிமை அனைத்து வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் மனித உரிமைகளை மதித்து ஒத்த முடிவை எட்ட வேண்டும்” என பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று  வேளாண் சட்டங்களை முழுமையாக இரத்துச் செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் 70 நாட்களுக்கு மேலாக  விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதோடு 50இற்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளதாகவும் போராடும் விவசாயிகளால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டம் தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.