இந்தியா ஐ.நாவில் கொடுத்த அழுத்தமே இங்கு தேர்தல் பற்றிய பேச்சுக்குக் காரணம் – கிரியயல்ல

அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியமையின் காரணமாகவே, அரசாங்கம் அண்மையில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அறிவித்தது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியயல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் லக்ஷ்மன் கிரியயல்ல மேலும் கூறியுள்ளதாவது –

“மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக தற்போது கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமேயாகும். அதாவது, ஐக்கிய நாடுகள் சபையை சமாளிப்பதற்காகவே மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்துக்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.

13 ஆவது அரசமைப்பு திருத்தத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஐ.நாவில் இந்தியா அழுத்தம் பிரயோகித்துள்ளது. இதன் காரணமாகவே மாகாணசபை தொடர்பாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், அரசாங்கம் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் இல்லை. இதன் காரணமாகவே தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவினூடாகவே புதிய அரசமைப்பு உருவாக்கப்படவேண்டும். ஆனால் தற்போது அரசாங்கத்துக்கு சார்பான சட்டத்தரணிகள் ஊடாக அரசமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முறையற்ற செயற்பாடாகும். 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அரசாங்கத்துக்குள்ளும் இணக்கப்பாடு இன்றியே புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறிருக்கையில் எவ்வாறு எம்மால் யோசனைகளை முன்வைக்க முடியும்? இந்த முறைமையை நாம்எதிர்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.