Tamil News
Home செய்திகள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை இரத்து செய்தது ஏன்?  அமைச்சர் ரோகிதா அபேகுணவர்தனா

இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த கொழும்பு துறைமுக ஒப்பந்தத்தை இரத்து செய்தது ஏன்?  அமைச்சர் ரோகிதா அபேகுணவர்தனா

இந்திய நிறுவனம், தங்கள் புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்ததால் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதாக  அமைச்சர் ரோகிதா அபேகுணவர்தனா தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT)  மேம்படுத்துவதற்கு இலங்கை, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகள்  இணைந்து முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கடந்த 2019ஆம் ஆண்டு செய்துகொண்டன.

இந்த நிலையில்  இந்த  ஒப்பந்தத்தை சமீபத்தில்  தன்னிச்சையாக இரத்து செய்த இலங்கை அரசு, தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்பு காரணமாக குறித்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படுவதாகவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை  மேம்படுத்தும் பணி இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும்  அறிவித்தது.

ஆனால் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள இந்தியா, 2019ஆம் ஆண்டு மே மாதம் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.

இதையடுத்து இந்தியாவிடம் இருந்து  பெற்றுக்கொண்ட  ரூ. 3 ஆயிரம் கோடி கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தி உள்ளது என  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  மேற்படி ஒப்பந்த பிரச்சினை தொடர்பான கேள்விகளுக்கு சிறீலங்கா நாடாளுமன்றத்தில், துறைமுகத்துறை அமைச்சர் ரோகிதா அபேகுணவர்தனா பதிலளித்த போது, “இந்த பணிகளை எடுத்துக்கொண்டிருந்த இந்திய நிறுவனம், தங்கள் புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்ததால் ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கேபினட் துணை கமிட்டியானது, புதிய விதிமுறைகளை பரிந்துரைத்தது. அதன்படி நமக்கு சாதகமான ஒரு நிலையில் இருந்து பேச்சுவார்த்தையை தொடங்கினோம். ஆனால் நமது விதிமுறைகளை இந்திய நிறுவனம் ஏற்க மறுத்தது. எனவே ஒப்பந்தம் கைவிடப்பட்டது’ என்று கூறினார். சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version