இந்தியாவில் தயாரிக்கப் பட்ட கொரோனா தடுப்பு மருந்து வெளியீடு

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தான  2-deoxy-D-glucose இன்று வெளியிடப்பட்டது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் இந்த மருந்தை இன்று வெளியிட்டு வைத்துள்ளனர்.

இந்த மருந்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் ஓர் ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் சயின்ஸ் (INMAS-DRDO), ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபோரட்டரீஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த மருந்தின் முதல் மற்றும் இரண்டாவது தொகுப்புகள் எய்ம்ஸ் மருத்துவமனை, பாதுகாப்பு படைகளால் நடத்தப்படும் மருத்துவமனைகள், டிஆர்டிஓ நடத்தும் மருத்துவமனைகள் போன்ற இடங்களில் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்தப்படும் என்று டிஆர்டிஓ தலைவர் மருத்துவர் ஜி. சதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் 2,81,386 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது   இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 2 கோடியே 49 இலட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளது.

அதே போல், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால்  4 ஆயிரத்து 106 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இது வரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 74 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.