இந்தியாவில் ஊரடங்கால் வாழ்விழந்து வெளியேறும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அம்மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களிடம் மகாராஷ்டிரா காவல்துறையினரின் மிரட்டி பணம் பறிப்பதாக தெரிவித்துள்ளனர்.

புனேவில் இருந்து தன் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் சனாவுல்லா கூறும்போது, “ஒரு டிக்கெட்டிற்கு பேருந்துகளில் 2500 ரூபாயில் இருந்து 3000 ரூபாய் வாங்குகிறார்கள்.

அப்படி இருந்தும், மகாராஷ்ட்ரா எல்லையில் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, ஜீப்புகளில் மாற்றிவிடுவார்கள். பயணிகளை அடைத்துக்கொண்டு செல்லும் இந்த ஜீப்புகளை, எல்லையில் நிற்கும் காவல்துறையினர் கண்டுக்கொள்ள மாட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில்  ஒரே நாளில்  2,00,739 பேருக்குக்  கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,40,74,564 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் நேற்று ஒரே நாளில் 1,038 பேர் பலியாகியதையடுத்து இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  இந்தியாவில் இதுவரை 11,44,93,238 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரிப்புக் காரணமாக இந்தியாவின் பல மாநிலங்களில்   புலம் பெயர் தொழிலாளர்கள் தமது  தொழிலை இழந்து தமது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.