Tamil News
Home உலகச் செய்திகள் இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்கும் ரஸ்ய-சீன தலைவர்கள்

இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்கும் ரஸ்ய-சீன தலைவர்கள்

இந்த மாதம் 9 ஆம் நாள் இந்திய தலைநகர் புதுடில்லியில் ஆரம்பமாகும் ஜி-20 மாநாட்டை தவிர்ப்பதற்கு ரஸ்ய தலைவர் விளமிடீர் பூட்டீனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீன அதிபருக்கு பதிலாக பிரதமர் லீ குயாங் பங்குபற்றுவார் என சீன தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த தகவல் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு இந்திய தரப்பு மறுத்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகைதரவுள்ளார், எனவே இது சீன-அமெரிக்க தலைவர்கள் நேரிடையாக சந்திப்பதற்கு வழியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீன அதிபரின் இந்த முடிவு அமெரிக்க அதிபரை அவர் சந்திக்க விரும்பவில்லை என்பதை புலப்படுத்துவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டில் இரு தலைவர்களும் நேரிடையாக சந்தித்திருந்தனர்.

ஜி-20 மாநாட்டை தவிர்த்துள்ள ரஸ்ய அதிபர் தனக்கு பதிலாக வெளிவிவகார அமைச்சர் லாரோவை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட சீன அதிபர் ஜி-20 மாநாட்டை புறக்கணிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய – சீன அதிபர்கள் இரு நாடுகளின் உறவுகள் குறித்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version