இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா- 3 இலட்சத்தை கடந்தது பலி எண்ணிக்கை

இந்தியாவில் 3 இலட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் இதுவரை அந்த வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று இலட்சத்தைக் கடந்துள்ளது.

இந்த உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை, அதிகமாக இருக்கலாம் என எச்சரிக்கும் நிபுணர்கள், பல மரணங்கள், கொரோனாவால் ஏற்பட்டவை என பதிவாகமலேயே போயுள்ளன என்கிறார்கள்.

இந்தியாவில் தற்போதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 26 மில்லியன் ஆக உள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் அதிக பாதிப்புகளை கொண்ட நாடாக விளங்கும் இந்தியா, இப்போது கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பை அதிகம் சந்திக்கும் நாடாக உள்ளது.

இதேபோல, உலக அளவில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக 3 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவான நாடாகவும் இந்தியா இருக்கிறது. இங்கு ஒரு இலட்சம் இறப்புகள், ஒரு மாதத்துக்கும் குறைவான காலகட்டத்தில் பதிவாகியுள்ளன.

அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முடியாத வகையில் சுகாதார கட்டமைப்பு திணறி வருகிறது. இந்த நிலைமைக்கு, சமீபத்திய வாரங்களில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையின் தீவிரமே காரணம் என்று நம்பப்படுகிறது.

பல மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு, முக்கியமான கொரோனா எதிர்ப்பு மருந்துகள் உரிய காலத்தில் கிடைக்காதது போன்றவை தற்போதைய நிலைமைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதற்கு இடையே, கொரோனா பெருந்தொற்று நோயாளிகளை எளிதாக தாக்கும் கருப்புப்பூஞ்சை எனும் மோசமான பூஞ்சை நோய் தாக்கமும் உயிரிழப்புக்கு காரணமாகி வருவது மருத்துவத்துறையினரை கவலை கொள்ளச் செய்துள்ளது.

சில இடங்களில் கொரோனா சடலங்களை சமாளிக்க முடியாத அளவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், மயானங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அவற்றை கையாளும் திறன் குறைந்து காணப்படுகிறார்கள்.

கொரோனா மரணங்கள் தொடர்பாக அரசு பதிவு செய்யும் மரணங்களின் எண்ணிக்கையை விட, பல மாநிலங்களில் பணியாற்றும் ஊடக செய்தியாளர்கள் தாங்களாகவே கணக்கிடும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நாடு எட்டாத நிலை நிலவுகிறது.