Tamil News
Home செய்திகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் ஊடுருவல்? கடற்படையினர் கடும் பாதுகாப்பு

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் ஊடுருவல்? கடற்படையினர் கடும் பாதுகாப்பு

இந்தியாவில் கொரோனாத் தொற்று மோசமடைந்திருப்பதால் அதற்கு அஞ்சி அங்கிருந்து பொதுமக்கள் இலங்கைக்குள் ஊடுருவலாம் எனக் கருதப்படுகிறது. அதைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக் கடற்படையினர் தமது கடலோரக் கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

இலங்கைக் கடற்படையின் இந்தக் கெடுபிடிகளால் இலங்கை மீனவர்கள் – குறிப்பாக வடக்கு, கிழக்கு மீனவர்கள் – அசெளகரியங்களை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்திருக்கின்றது என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் பேசாலை மீனவர்கள் கடற்படையினரிடம் பதிவு செய்தே இனிக் கடலிற்குள் செல்ல முடியும் எனக் கடற்படையினர் அறிவித்துள்ளனர். இதற்கமைய பேசாலையில் தற்போது 215 ட்ரோலர் படகுகளும், 385 பிற படகுகளும் உள்ளன. அதே நேரம் இதன் அருகே உள்ள கிராமமான காட்டாஸ்பத்திரி கிராமத்தில் 285 படகுகள் உள்ளன. இவர்கள் தொடர்பான நடவடிக்கைகள், பதிவுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக இன்று மன்னாரில்விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்திற்கு மாவட்டக் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகளுக்கு அமைய இனிவரும் நாள்களில் இப்பகுதி மீனவர்கள் கடலிற்கு செல்ல கடற்படையினரிடம் பதிவுகளை மேற்கொண்டு அனுமதி பெறுவதோடு, அவர்கள் கடலுக்குள் இறங்கும் போதும் கடலிலிருந்து திரும்பும் போதும் பரிசோதனைகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழகத்தில் ஏற்கனவே தஞ்சம் புகுந்து வசிக்கும் வடக்கு, கிழக்கைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்கள், அங்கு மோசமாகப் பரவி வரும் கொரோனாவுக்கு அஞ்சி, கடல் வழியாக இங்கு மீளவும் தப்பி ஓடிவர முயலலாம் எனக் கருதப்படுகின்றது. அத்தகையோர் மூலம், அங்கு ஏற்கனவே திரிபடைந்து பரவி வரும் கொரோனா வைரஸ் இங்கும் பரவலாம் என்ற அச்சத்திலேயே கடற்படையின் கரையோரக் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version