இந்தியர்களை பாதிக்கும் ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்வு திட்டம் 

2020-21 நிதியாண்டின் புலம்பெயர்வு திட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு ஏற்படுத்தியுள்ள மாற்றம், ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை குறைத்திருக்கிறது. 

ஆஸ்திரேலியர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் விதமாக இந்த மாற்றததை ஆஸ்திரேலிய அரசு கொண்டு வந்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

கடந்த ஆண்டு திறன்வாய்ந்த வெளிநாட்டவர்களுக்கு 1,08,682 இடங்கள் வழங்கப்பட்டநிலையில், தற்போது அது 79,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் எந்த பகுதியிலும் வேலைச்செய்ய அனுமதிக்கும் Skilled Independent விசாவுக்கான இடங்கள் 6,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதைக் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், நிறுவனங்கள் வழங்கும் திறன்வாய்ந்த விசா எண்ணிக்கையில் 27 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், திறன்வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும்  ஆஸ்திரேலியாவின் முயற்சி ஆஸ்திரேலியாவுக்கு அதிகம் செல்லக்கூடிய எண்ணிக்கையில் முதன்மையாக இருக்கும் இந்தியர்களை பெரிதும் பாதிக்கக்கூடும் எனக் கூறப்படுகின்றது.

இந்த மாற்றம் தொடர்பான டைமஸ் ஆப் இந்தியா ஊடகத்தின் கேள்விக்கு பதலளிக்கும் விதமாக பேசியுள்ள ஆஸ்திரேலிய உள்துறை, “நிரந்தர புலம்பெயர்வு திட்டம் 2020- 21 தொடர்பான எங்களது நோக்கம் ஆஸ்திரேலியா பொருளாதார ரீதியாக மீள்வதற்கும் ஆஸ்திரேலிய தொழில்களை வளர்ப்பதற்கும் ஆஸ்திரேலியர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குமானது,” எனத் தெரிவித்துள்ளது.