Home ஆய்வுகள் இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள் -பகுதி 1

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள் -பகுதி 1

மாபெரும் தடங்கல்களுக்கு எதிராகத் தமது இறையாண்மையை வென்றெடுக்கும் தமிழ்மக்களின் போராட்டத்தில் அவர்களின் வரலாற்றைப் பதிதலும் நினைவு கூருதலும் அத்தியாவசியமான ஒரு பகுதியே. இவ்வெளியீடும் அவ்வரலாற்றைப் பதிவுசெய்யும் அந்த அவசியச்செயற்பாட்டின் ஒரு பகுதியே ஆகும்.

இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கிடையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் இந்தியப் படையினர் இலங்கைத் தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் 1987 ஆம் ஆண்டு காலடிவைத்தனர். விரைவிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்த இந்தியப் படையினர், பொதுமக்களுக்கு எதிராகப் பல அநீதிகளையும் இழைத்தார்கள்.

அவர்களது படைநடவடிக்கைகளின்போது அவர்கள் மேற்கொண்ட பரந்தளவிலான பொதுமக்களின் படுகொலைகளிலும் அநீதிகளிலும் ஒரு சிறு பகுதியே இங்கு பதிவுசெய்யப்படுகின்றது. இந்தியப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் மூன்று சம்பவங்கள் குறிப்பாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை யாழ்ப்பாண வைத்தியசாலையிலிருந்த ஊழியர்கள்,நோயாளர்கள், பார்வையாளர் ஆகியோரின் படுகொலை, 1989 இடம்பெற்ற வல்வைப்படுகொலை, மற்றும் தமிழ்ப்பெண்கள் மீதான பெரும்தொகையான பாலியல் வல்லுறவுகள் ஆகியவையே அவையாகும்.

இந்நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்ட பல இந்தியர்கள் புத்தகங்களை எழுதியுள்ளார்கள். எனினும்,பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களால் ஒரேயொரு புத்தகம் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. வல்வைப் படுகொலை பற்றி அதில் நேரடியாகப் பாதிக்கப்பட் அனந்தராஜா என்பவரால் எழுதப்பட்ட புத்தகமே அதுவாகும். அப்புத்தகம் தற்போது கிடைப்பதற்கரிதாகவுள்ளது. இப்புத்தகத்தில் பல பிரதிகள் வன்னியில் இருந்தன,ஆனால் அவையனைத்துமே 2009 மே யில் நடந்த இறுதிச் சண்டைகளில் அழிக்கப்பட்டுவிட்டன.Indias mylai Massacare at Valvettiturai இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள் -பகுதி 1

2009 இற்கு முன்னர் தமிழ்மக்கள் மீது நடாத்தப்பட்ட பாரியளவிலான படுகொலைகளைப் பதிவு செய்வதில் வடக்குக் கிழக்கு மனித உரிமைகள் செயலகமும் வடக்குக் கிழக்கு புள்ளிவிபர மையமும் கூட்டாக இணைந்து செயற்பட்டன.

அம்முயற்சியின் இரண்டாவது பாகமே இப்புத்தகமாகும். இலங்கைப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் தொடர்பாக ஒரு புத்தகம் “தமிழினப் படுகொலைகள் – 1956-2008” என்னும் பெயரில் 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இந்தப் புத்தகம் 1987-1990 வரை தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளைப் பதிவுசெய்கின்றது.

1980களின் ஆரம்பத்தில், பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையின் கீழ், பெரும்பாலும் தன்னுடைய தென்கோடியில் உருவாகிவந்த பிரச்சினையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழ்க் கிளர்ச்சி இயக்கங்களுக்கு இந்தியா உதவியது.

இந்தியா தலையிட்டு, இலங்கைத் தீவில் இன்னொரு “பங்களாதேஸை” உருவாக்கக் கூடும் என்ற நம்பிக்கையை தமிழ்மக்கள் மத்தியில் இது உருவாக்கியது. ஆனால் இதே இந்தியாவே, இப்புத்தகத்தில் உள்ளடக்கப்பட்ட காலத்திலான தனது நடவடிக்கையின் போது, “இந்தியத் தாய்நாடு” பற்றித் தமிழ் மக்கள் வைத்திருந்த நோக்கை குழப்பமடையச் செய்யும் வகையில; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிராகத் திரும்பியது.

தமிழ் மக்களின் இக்குழப்பம் சர்வதேச அரசியல் பற்றிய அவர்களின் அறிவு பற்றாமையையே பிரதிபிலிக்கின்றது. அக்காலகட்டத்திலிருந்து தமிழ் மக்கள் பலதூரம் வந்து விட்டார்கள். இருப்பினும், இந்திய அரசின் தமிழ் மக்களுக்கெதிரான தீவிர நிலைப்பட்டின் பின்னணி காரணங்கள் இதுவரை தெளிவு படுத்தப் படாமலே உள்ளது. இக்காரணங்களை வெளிக்கொணர்வது தமிழ் மக்களை எதிர் நோக்கும் முக்கிய பணிகளில் ஒன்றாகும்.

  1. கொக்குவில், பிரம்படி, பொற்பதி வீதிப் படுகொலை – 12 அக்டோபர் 1987

கொக்குவிற் கிராமம் யாழ் மாவட்டத்தில் நல்லூர்ப் பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் அமைந்துள்ள இடத்திலிருந்து மேற்குப் புறமாக ஏறக்குறைய ஐநூறு யார் தூரத்தில் கொக்குவில் பிரம்படி வீதி உள்ளது.

இந்திய இராணுவத்தினர் 1987ஆம் ஆண்டு பத்தாம் மாதம் பன்னிரண்டாம் திகதி பலாலியிலிருந்து யாழ் நகரை நோக்கிய தொடருந்து நிலைய வீதியூடாகக் கனரக வாகனங்கள் மூலம் முன்னேறி கொக்குவில் பிரம்படிப் பகுதியினைச் சுற்றிவளைதத்து. பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், இளைஞர்கள் என யாவரையும் வீதிகளுக்கு அழைத்து வந்து சுட்டதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள். அன்றையதினம்

வேறு ஒரு பகுதிய10டாக வந்த இந்திய இராணுவத்தின் மற்றுமொரு அணியினர்,கொக்குவில் பொற்பதிப் பகுதியைச் சுற்றிவளைத்து மக்களைக் கைதுசெய்து கொக்குவில் பிள்ளையார் ஆலயத்துக்கு வடக்காக நானூறு யார் தூரத்தில் அமைந்துள்ள சனசமூக நிலையத்தின் அருகே வீதியோரத்தில் அனைவரையும் உயிருடன் நிலத்தில் படுக்க வைத்து இராணுவத்தின் கவச வாகனங்கள், டாங்கிகளை அவர்கள் மீது ஏற்றிப் படுகொலை செய்தனர். இதில் அறுபத்துநான்கு பொதுமக்கள் உயிரிழந்தார்கள். 1987 ஒக்டோபர் பன்னிரண்டாம் திகதி பிரம்படிப் பகுதி, கொக்குவில் பொற்பதிப் பகுதி ஆகிய இடங்களில் நடந்த சம்பவத்தில் நூறிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தார்கள்.

பொற்பதி வீதியைச் சேர்ந்த 87 வயதான தட்சணாமூர்த்தி சிவராஜலிங்கம் தன்னுடைய வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறுகின்றார்,

“சுகாதாரப் பரிசோதகரான என்னுடைய சகோதரன் தட்சனாமூர்த்தி தவராஜலிங்கம்,வயது 44 அவருடைய மனைவி தவராஜலிங்கம் கனகமலர், வயது 38, பிள்ளைகளான தவராஜலிங்கம் கரன், வயது 10, தவராஜலிங்கம் கஜேந்திரன் வயது 6, 18 மாதங்களே நிரம்பிய தவராஜலிங்கம் தர்மிகா ஆகியோர் கொக்குவில் பிரம்படி வீதியிலுள்ள இல 24 வீட்டில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். என்னுடைய இன்னெரு மருமகனான 11 வயதான ஹர்சனும் அவர்களுடன்தான் இருந்தார்.

அன்றைய தினம் என்னுடைய சகோதரனின் வீட்டுப்பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அடுத்தநாள் காலை 7 மணிக்குத்தான் அவ்வீட்டுக்கு என்னால் போக முடிந்தது. அங்கே, என்னுடைய சகோதரன் அவரின் மனைவி, பஞ்சிளம் பெண்குழந்தை ஆகியோரின் சடலங்கள் வீட்டிற்குள் இருந்தன. வேறு இரு சடலங்களும் அவ்வளாகத்தில் காணப்பட்டன.

கரன் கஜேந்திரன் ,ஹர்சன் ஆகிய மூன்று பையன்பளும் இன்னொரு அறையிலிருந்த கட்டிலின் கீழ் ஒளிந்திருந்ததைக் கண்டேன். கஜேந்திரனும் ஹர்சனும் காயமடைந்திருந்ததுடன் குருதி வடிந்துகொண்டும் இருந்தது.”

7 ஆம் வட்டாரம் நைநாதீவைச் சேர்ந்த 47 வயதான நாகலிங்கம் நாகேஸ்வரி தன் வாக்குமூலத்தில்,

“நான் என்னுடைய அண்ணா நாகலிங்கம் ஜீவரட்ணத்தின் குடும்பத்துடன் இல 24, பிரம்படி வீதி, கொக்குவிலில் வாழ்ந்துகொண்டிருந்தேன். சில வருடங்களுக்கு முன்னர்தான் என் பெற்றோர் மரணமடைந்திருந்தார்கள். அவ்வீட்டில் அண்ணாவும், பிள்ளைகளான கோகிலாவும் மனோகரனும், என்னுடைய சகோதரிகளான ஆனந்தகௌரி,சாரதாதேவியும் ஒன்றாக வசித்தோம்.

அன்றைய தினம் காலை ஒரு மணியிலிருந்து, துப்பாக்கிச்சூட்டுச் சத்தத்தால் எமது உறக்கம் கலைந்துபோயிருந்தது. காலை 5.30 அளவில்ää இந்தியப் படையினர் எமது வீட்டு வளவுக்குள் நுழைந்து எம்மை வெளியில் வருமாறு சொன்னார்கள். படைவீரர்கள் எமது வீட்டு வளாகத்தில் நின்றுகொண்டிருந்த நேரத்தில் எறிகணைகள் அருகில் விழுந்து வெடித்தது.

பின்னர் குண்டுப் பயத்தினால் பயமடைந்தோ என்னமோ அவர்கள் தங்கள் சுடுகலன்களை எம்மை நோக்கித் திருப்பினார்கள். என்னுடைய அண்ணாவும் ஆறே வயது நிரம்பிய அவரது மகன் மனோகரனும் அவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். என்னுடைய இரு சகோதரிகளும், ஏழு வயதான மருமகள் கௌசலாவும் அவர்களின் துப்பாக்சிச் சன்னங்களுக்கு இலக்காகிக் காயமடைந்தார்கள். பின்னர் அவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.”

தொடரும் …….. (2. புதுக்காட்டுச் சந்திப்படுகொலை 11 அக்டோபர் 1987 )

Exit mobile version