இணைப்போமா? இணைவோமா?

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை ரசோலுக்கு 48 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தேர்தல் உலக நாடுகளின் தலைமை, ஆசியா சார்ந்ததாக அதுவும் சீனப் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது என்பதை மீளவும் தெளிவாக்கியுள்ளது.

இந்துமாகடலின் 1195 தீவுக் கூட்டங்களில், மாலைதீவும் இலங்கையைப் போன்று சீனாவுடன் அதனுடைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் முக்கியமான ஒரு தீவாக, வரலாற்றுத் தொடர்புடன் விளங்கும் தீவு. உலகின் மூன்றில் இரண்டு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களும், வர்த்தகக் கப்பல்களில் அரைவாசிக்கு மேற்பட்டனவும் பயணிக்கும் கடல்வழிப் பாதைகளுக்கு மிக அருகாமையில் உள்ள மாலைதீவு உலகச் சந்தை,  உலகப் பாதுகாப்பு என்பனவற்றுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இன்று உள்ளது.

அதே வேளையில் இந்தியாவில் இருந்து 1200 கிலோ மைலிலும், இந்தியாவின் இலட்சத்தீவுக் கூட்டத்தில் இருந்து 700 கிலோ மைலிலும் உள்ளது மாலைதீவு.  1965இல் மாலைதீவு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலாக அரை நூற்றாண்டுக்கு மேலாக 52 ஆண்டுகள் மாலைதீவு, இந்திய மேலாண்மையுள் விளங்கிய நாடு. 1988இல் அன்றைய சர்வாதிகாரத் தனமான மாலைதீவு அரச அதிபர் மாமூன் அப்துல் கயாம் அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக நடந்த சதியை இந்தியா தனது படையினை அனுப்பி முறியடிக்கும் அளவுக்கு இந்திய மேலாண்மையைக் கொண்டிருந்த நாடு மாலைதீவு. இந்தியாவைச் சார்ந்து நின்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தையும், இந்தியா மாலைதீவு அரசியலுள் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தியது என்பதும் வரலாறு.

மேலும் புவியியல் சூழல் காரணமாக உள்ள பெரிய நாடுகள், சிறிய நாடுகளின் மேல் மேலாதிக்கம் செலுத்துவதை அரசறிவியலில் ‘பின்லன்டனிசம்’ என்பர். அதாவது பின்லாந்து மேல் யேர்மன் மேலாதிக்கம் செலுத்திய இயல்பு நிலையையும், பின்லாந்து,  ‘இஸ்காண்டிநேவிய’ நாடுகளுடனான இணைவின் வழி அதனை வென்று, செயற்படும் வரலாற்றையும் இந்த ‘பின்லன்டனிசம்’ என்னும் சொல்லாட்சி குறிக்கும். சிறு நாடும் கூட நாடுகளின் கூட்டுகளுள் இணைவதன் வழி தம்முடைய தன்னாட்சியினை உறுதிப்படுத்த முடியும் என்னும் இந்த வரலாற்று உண்மைக்கு, மாலைதீவின் சமகால வரலாறு மற்றொரு சான்றாகிறது.

2014 இல் சீனாவின் அரச அதிபர் சீ ஜின்பிங்கின், அதுவரை தூதரகத் தொடர்புகள் கூட இல்லாதிருந்த மாலைதீவுடன், “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்” என்னும் அவருடைய தத்துவத்தின் அடிப்படையில் சீன – மாலைதீவு நட்புப் பாலத்தை உருவாக்கினார். இது சீனாவின் 21ஆம் நூற்றாண்டில் மீளவும் முன்னைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடாகிய ‘மண்டலங்களையும் பாதைகளையும்’ அமைத்தலுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை உருவாக்க உதவியது. இதன்வழி மிக அதிகளவிலான உட்கட்டுமான வளர்ச்சியை மாலைதீவுக்கு ஏற்படுத்த உதவும் நிதியளிப்புக்களையும், கடனளிப்புக்களையும் சீனா தொடங்கியது. 08.12.2017 இல் மாலைதீவின் அரச அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் மாலைதீவு, சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பாகிஸ்தானுக்கு அடுத்த இரண்டாவது தெற்காசிய நாடாகக் கையெழுத்திட்டது. மாலைதீவுடனும், சிறீலங்காவுடனுமான சீனாவின் நெருக்கம், இன்று இந்தியாவின் இலட்சத்தீவில் நேரடியல்லாத மூலதனமிடும் அளவுக்குச் சீனா தன்னை அகலப்படுத்தச் சீனாவுக்கு உதவியுள்ளது. இது இன்று இந்துமாகடலில் சீனாவின் பட்டுப்பாதை குறுகிய காலத்தில் விரைந்து எழும் புதிய வரலாற்றின் செல்நெறியாகிறது.

இந்நிலையில், இந்துமாகடலில் தன் மேலாண்மையுடன் கூடிய அமைதியினை உறுதிப்படுத்தும் அரசியல் மூலோபாய நோக்கில்தான்,  2018இல் இந்தோனேசியா மாலைதீவுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிலையான உறுப்பினரல்லாத, உறுப்புரிமைக்குப் போட்டியிட்ட போது, இந்தியா இந்தோனேசியாவை ஆதரித்து வெற்றிபெற வைத்தது.

ஆனால் இன்று சீன – மாலைதீவு நட்புறவுப் பாலம் இறுக்கமடைந்த நிலையில், மீளவும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராவதை ஆதரித்துள்ளது.

இது ‘எதிர் காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்’ என்னும் சீனத் தத்துவத்தின் ஆற்றலாகப் பார்க்கப்பட வேண்டிய ஓன்றாகவுள்ளது. இந்தத் தத்துவத்தை ஈழமக்கள் இன்று தங்கள் அரசியல் மூலோபாயமாகக் கொள்ள வேண்டிய நேரமிது.

அதாவது சிறீலங்காவின் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் செப்டெம்பர் மாதத்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் மாலைதீவைச் சேர்ந்த அப்துல் சாகிட் அவர்களின் தலமையிலேயே தொடங்கப் போகின்றது. இந்நிலையில், மாலைதீவுடன் ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொன்மையின் பழமையும் இன்று ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொல்லைகளின் நிலைமைகளும் ஈழத்தமிழர்களால் எந்த அளவுக்குத் தெளிவாக்கப்படப் போகின்றன என்பதிலேயே ஈழத்மிழர்கள் குரல் ஐக்கிய நாடுகள் சபையில் பலமாக ஒலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மாலைதீவுடன் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் அத்தனையுடனும், ஈழத்தமிழர்கள் தங்களின் உலகளாவிய நிலையில் பரந்துள்ள புத்திஜீவித் தனத்தையும், சமூக மூலதனங்களையும், எந்த அளவுக்கு இணைப்பார்கள் – எந்த அளவுக்கு ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைவார்கள் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளமைக்கப்படும் காலத்தின் குறுக்கம் உள்ளது என்பதே ‘இலக்கின்’ இவ்வார எண்ணமாக உள்ளது.