Tamil News
Home செய்திகள் இணைந்த வடக்கு கிழக்கில் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்- விக்னேஸ்வரன்

இணைந்த வடக்கு கிழக்கில் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்- விக்னேஸ்வரன்

இலங்கையில் புத்த பிக்குகளின் செல்வாக்கு சட்டம், ஒழுங்கு மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் குழிதோண்டி புதைக்கும் நிலையினை உருவாக்கியுள்ளது என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பசிக்கு சகோதர முஸ்லிம் மக்கள் இரையாகிவரும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் அவர்களை ஆதரவுடனும் பாசத்துடனும் ஆரத்தழுவுவதாகவும் அவர்களின் துயரத்தில் பங்குகொள்வதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பல தசாப்தங்களாக பலிகொண்டுவரும் சிங்கள பேரினவாதத்தின் பார்வை தற்போது முஸ்லிம் மக்களின் மீது திரும்பியிருக்கும் இந்த வேளையில், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் கைகோர்த்து, இணைந்த வடக்கு கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்காகப் பாடுபடவேண்டியதன் அவசியத்தை நடைபெறுவரும் நிகழ்வுகள் காட்டுவதாகவும் அத்தகைய ஒரு கட்டமைப்பு மட்டுமே இரண்டு சமூகங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும் இன்று செய்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் அரசியல், பொருளாதார பலத்தை இலக்குவைத்து பௌத்த பேரினவாதம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் பேராபத்தை உணர்ந்துகொண்டு வெவ்வேறு கட்சிகளையும் சேர்ந்த முஸ்லிம் தலைவர்கள் ஒன்றுசேர்ந்து ஒற்றுமையை வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் இதனை வெகுவாகப் பாராட்டுவதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விசாரித்து தேவையெனில் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றஞ்செய்யாதவர்களையும் பெரும்பான்மையினம் தண்டிக்க விழைவது எந்த விதத்திலும் மன்னிக்க முடியாதது என்றும் அவர் தம் அறிக்கையில் கூறியுள்ளார்

Exit mobile version