இணக்கப்பாட்டுடனான தீர்மானம் ஒன்றுக்கு இலங்கை முயற்சி – முதன்மை நாடுகளுடன் பேச்சு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பரஸ்பர இணக்கப்பாட்டுடனான தீர்மானமொன்றை கொண்டுவருவது குறித்து பிரிட்டன் தலைமையிலான முகன்மை நாடுகள் குழுவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்வாறான தீர்மானத்தை ஏற்றுக்கொள்வது அரசியல் ரீதியில் சவாலான விடயம் என்பதை அவர் டீவி ஒன் இன் நியுஸ்லைன் உடனான உரையாடலின் போது ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐலண்ட் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை புதிய தீர்மானத்திற்கு இணை அணுசரணை வழங்கவேண்டும் அல்லது வாக்கெடுப்பை எதிர்கொள்ளவேண்டும் என அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கு இருதரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன இன்று இந்த பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை தீர்மானத்திற்கு அனுசரணை வழங்குவதற்கான வாய்ப்புகளை நிராகரித்துள்ள அவர் புதிய தீர்மானம் தொடர்பில் இலங்கை எந்த அழுத்தங்களையும் எதிர்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். முகன்மை குழு முன்வைத்துள்ள விடயங்களை இலங்கை ஆராய்ந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.