Tamil News
Home செய்திகள் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு அஞ்சலிகளும் இறுதி வணக்கமும் – யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் சமூகம்

ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு அஞ்சலிகளும் இறுதி வணக்கமும் – யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் சமூகம்

மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் ஒரு கிறிஸ்தவ மதத் தலைவர். ஆயினும் மத எல்லைகளைக் கடந்து மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கியவர். அதனால்    தமிழர்கள் மனங்களில் ஏன் தமிழ்நாட்டு உறவுகளின் உள்ளங்களிலும் மனிதம் என்கின்ற தளத்தில் இயங்கும் அனைவர் இதயங்களிலும் இடம் பிடித்தவர்.

தனது சமயக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றிய அதேவேளையிலே, அனைத்து மனிதர்களையும் அன்புள்ளத்தோடு நேசித்து வேறுபாடின்றி தேவையில் இருப்போருக்கு உதவி செய்யும் நல் உள்ளத்தினர்.  போர்க் காலத்தில் மனிதநேய பணிகளை முழு வீச்சோடு முன்னெடுத்ததும் அல்லாமல், நீதியோடு கூடிய அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக சம்பத்தப்பட்ட சகல தரப்போடும்   பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்களை அனுசரணை செய்து அர்ப்பணத்தோடு உழைத்தவர்.

சர்வதேச தரப்புகளிடம் தமிழர் தரப்பு நியாயங்களை தயங்காது எடுத்துரைத்தவர். அதனால் எத்தரப்பிலிருந்து என்ன எதிர்ப்பு வந்தாலும் துணிவோடு உண்மை பேசிய அஞ்சா நெஞ்சினர். குறிப்பாக போரின் முடிவின்பின் தமிழர் தரப்பில் துணிவோடு குரலெழுப்ப யாருமே இல்லாத நிலையில் நடந்த இன அழிப்பை துணிவோடு பேசு பொருளாக்கியவர்.

இதனால் தமது திரு அவையின் கொழும்பு மையத் தலைமைத்துவத்தின் அதிருப்தியை சந்தித்த போதும் சரி, அரச தலைமைகளின் எதிர்ப்பை சம்பாதித்த போதும் தனது நிலைப்பாட்டிலும், செயற்பாட்டிலும் ஓரடிகூட பின்வாங்கியவர் அல்ல. மாறாக கிறிஸ்தவ விடுதலைக் கருத்தியல் பாற்பட்ட இவரது முயற்சிகள் இன்னும் உத்வேகம் பெற்றன.

குறிப்பாக 2011ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழுவின் முன்னிலையில் இலங்கை அரச நிறுவனங்களின் பதிவுகளை மேற்கோள்காட்டி இறுதி போரில் 146,479 தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் என்று இவர் மேற்கொண்ட சமர்ப்பணம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பதிவாகியுள்ளது.

 இந்த நிலையிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. தமிழர்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்த ஒரு மகானின் குரல் ஓய்ந்து விட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தி நிற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் சமூகம், தமிழ் மக்களுக்கான அவரது இலக்குகள் நிறைவேற தொடர்ந்தும் உழைக்குமென உறுதி பூணுகிறது.

Exit mobile version