Home ஆய்வுகள் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய இராணுவம் இழைத்த போர்க்குற்றங்கள் – தமிழில் ஜெயந்திரன்

ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய இராணுவம் இழைத்த போர்க்குற்றங்கள் – தமிழில் ஜெயந்திரன்

அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஆப்கானிஸ்தானில் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நான்கு வருடங்களாக நடைபெற்ற விசாரணையில் கண்டறியப்பட்ட மோசமான விடயங்கள் இறுதியாக சென்ற வாரம் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. படையினர் இழைத்த வன்செயல்களின் பாரதூரத் தன்மையை மக்கள் இப்போது புரிந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றனர். உயிராபத்தை விளைவித்த 23 நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. சிறுவர்கள் உட்பட 39 ஆப்கான் பிரசைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவுஸ்திரேலிய இராணுவ வீரர்களுள், விசேட வான்வழிப் படையணியைச் சேர்ந்த (Special Air Service Regiment) 25 வீரர்கள் இக்குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள்.

மிகவும் காண்டுமிராண்டித் தன்மை வாய்ந்த ‘blooding” என்று அழைக்கப்படும் ஒரு நடைமுறையை அங்கே அவர்கள் கைக்கொண்டிருக்கிறார்கள். இந்த விசேட படையணியைச் சேர்ந்த மிக இளம் வயதினரான படைவீரர்கள், தமது முதலாவது கொலையைச் செய்யவும் அதுமட்டுமன்றி, இந்நிகழ்வுகளை நேரிலே பார்த்தவர்கள் எதையும் பேசாது அமைதியாக இருக்கவும் கொலையாளிகள் இறந்தவர்களின் உடல்களின் மேல் ஆயுதங்களையும் தொடர்பாடற் கருவிகளையும் வைத்து தாங்கள் செய்த குற்றங்களை மறைக்கும் ஓர் இரகசியக் கலாச்சாரத்தையும் பேணுமாறும் பொறுப்பான கட்டளை அதிகாரிகளினால் பணிக்கப்பட்டிருந்தார்கள்.

20101024adf8262658 406a 1 scaled e1596943650620 ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய இராணுவம் இழைத்த போர்க்குற்றங்கள் -	தமிழில் ஜெயந்திரன்

இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான விபரங்கள் ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்ட அதே வேளையில், இந்த வன்முறைகள் எப்படி நடைபெற்றன என்பதையும் அவற்றுக்கு அடிப்படைக் காரணமாக இனவாதமே இருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ள அவுஸ்திரேலியா தயாராக இல்லாத ஒரு நிலையையும் அவதானிக்கக்கூடியதாகவிருக்கிறது. அந்நாட்டு ஊடகங்கள் இந்நிகழ்வுகள் தொடர்பாக வெளியிட்ட செய்திகள் எல்லாம் படையினர் புரிந்த இக்குற்றங்களை நியாயப்படுத்துபவையாகவே அமைந்திருந்தன.

அவுஸ்திரேலியாவின் தொலைக்காட்சித் திரைகளில் தோன்றிய இராணுவம், கல்வி, உளநலம் போன்ற துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் அனைவரும் தமது இராணுவத்தின் நேர்மை, கட்டுப்பாடு போன்ற விடயங்களை எடுத்துரைத்தது மட்டுமன்றி பாதுகாப்புப் படையினரின் அடையாளம், உள உறுதி என்பவற்றின் மீது இவ்விடயங்கள் செலுத்தக்கூடிய தாக்கங்கள் பற்றியும் சுட்டிக்காட்டி, இழைக்கப்பட்ட இக்குற்றங்களின் கனாகனத்தைக் குறைத்துக் காட்டுவதில் கருத்தாயிருந்தார்கள். ஈராக்கிலுள்ள அபு கிராய்ப் (Abu Ghraib) சிறைச்சாலையில் அவர்களது அமெரிக்க சகாக்கள் தாம் மேற்கொண்ட சித்திரவதைகள், கொலைகள் போன்றவற்றை மறைத்தது போன்றே, இப் போர்க்குற்றங்களும் ஒரு சில ‘கூடாத அப்பிள் பழங்களால்” மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் என்று இப் போர்க்குற்றங்களை அவுஸ்திரேலிய அதிகாரிகளும் ஊடக வர்ணனையாளர்களும் காட்ட முயன்றதையும் பார்க்கக்கூடியதாகவிருந்தது.

இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களின் பயங்கரம் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பின்னரும் அவற்றின் கொடூரமும், கைக்கொள்ளப்பட்ட மிக மோசமான நடைமுறைகள் மறுக்கப்பட முடியாதவாறு வெளிப்படுத்தப்பட்ட போதிலும் கூட, வெள்ளை இனத்தவர்கள் தாம் குற்றமற்றவர்கள் என்பதை நிலைநாட்ட அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட விசாரணை தொடர்பான செய்திகளை வெளியிட்ட அவுஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகங்கள், இராணு வீரர்களதும் அவர்களது குடும்பங்களதும் உளநலத்தை மேம்படுத்துவதற்கு துணைபுரியக்கூடிய ஒரு தொலைபேசிச் சேவைபற்றிய செய்திகளைக்கூறி இக்கதையை நிறைவு செய்ததே அவுஸ்திரேலிய நாட்டில் வாழுகின்ற ஒரு ஆப்கான் என்ற வகையில் என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டிய விடயமாகும். சாதாரண அப்பாவி மக்களுக்கெதிராகச் சீருடை தரித்தவர்கள் அத்துமீறல்களைப் புரிந்துவிட்டு அதற்கு எந்தவித பொறுப்புக்கூறலையும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு எதிராக உலகம் முழுவதுமே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அவுஸ்திரேலியாவில் இவ்விடயங்கள் நடைபெற்றது கவனிக்கத்தக்கதாகும்.

இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக அவுஸ்திரேலியா கேட்டும் கேட்காதது போல் இருப்பதும் தமது சொந்த நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கும் மனப்பாங்கும் மிகவும் மோசமான விடயங்களாகும். இப்போர்க்குற்றங்களினால் ஆப்கானிஸ்தானிலே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மக்கள் பற்றியோ, அவுஸ்திரேலியாவில் வதிகின்ற ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்கள் பற்றியோ இந்த ஊடகங்கள் எந்தவிதத்திலும் அக்கறை கொள்ளாமல் இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவிருக்கிறது. இங்கு வாழும் எங்களில் பலர் ஏற்கனவே போரின் காயங்களைத் தாங்கியிருப்பதோடு, இவ்விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்களின் காரணமாக மீண்டும் ஒரு தடவை பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறோம்.

விசாரணை அறிக்கை வெளியிடப்பட்ட நாளில் இராணுவத் தளபதி அங்கஸ் காம்பெல் (Angus Campbell) ஆப்கான் மக்களிடம் மன்னிப்புக் கோரியது உண்மை தான். போர் உக்கிரமமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இக்குற்றங்கள் இழைக்கப்படவில்லை என்று விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அதே முடிவையே இராணுவத் தளபதியும் குறிப்பிட்டது ஆச்சரியமாகவிருந்தது. அவுஸ்திரேலிய இராணுவத்தைப் பொறுத்தவரையில் ‘போரின் உக்கிரத்தில்” நடைபெற்ற இந்தக் கொலைகளும் ஏனைய பல குற்றங்களும் ‘சட்டபூர்வமானவையாகப்” பார்க்கப்பட வேண்டும் என்ற பார்வை இருக்கிறது.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” (war on terror) என்ற அடைமொழிக்குள் முன்னெடுக்கப்படும் போர்களில் ஏற்படும் அப்பாவிப் பொதுமக்களின் இழப்பு, பக்கவிளைவாக ஏற்படும் சேதமாக (collateral damage) அல்லது பயங்கரவாதச் சந்தேக நபர்களாகவும் மோசமான குற்றங்களைப் புரிந்தவர்கள் வீரர்களாகவும் சுதந்திரப் போராளிகள் பயங்கரவாதிகளாகவும் பயங்கரவாதிகள் முஸ்லிம்களாகவும் பார்க்கப்படும் ஓர் நிலை தோன்றியிருக்கிறது. இந்தப் பயங்கரவாதத்துக்கு எதிரான போரிலே கறுப்பு மற்றும் பழுப்பு (brown) நிறங்களைக் கொண்ட மக்களது உயிர் எந்தவிதப் பெறுமதியற்றதாகவும் அவர்களை எது வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் இப்படிப்பட்ட இறப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை என்றோ வருந்தப்பட வேண்டியவை அல்ல என்ற கருத்தும் பலமாக நிலவுவதைப் பார்க்கலாம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஐந்து இலட்சம் மக்கள் ‘போரின் உக்கிரத்தில்” கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமன்றி கொடூரமான இக்கொலைகள் தொடர்பான எந்தத் தகவல்களும் அறிக்கையிடப்படுவதில்லை.

உலகின் குறிப்பிட்ட சில பாகங்களில் இப்படிப்பட்ட வன்செயல்களைச் சாதாரணமானவையாகப் பார்க்கும் மேற்குலகின் அணுகுமுறைகளின் காரணமாக ‘blooding” போன்ற அப்பாவிப் பொதுமக்களையும் தடுத்து வைக்கப்படடவர்களையும் இரக்கமற்ற விதத்தில் கொலை செய்கின்ற நடைமுறையை ஒரு சடங்காகவே செய்வதற்கான ஒரு இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண்களைப் போர்வீரர்களாக மாற்றுவதற்கு அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்யும் நடைமுறை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இங்கு தான் தாங்களே மீட்பர்கள் என்ற மாயையில் மூழ்கியுள்ள வெள்ளை இனத்தைச் சார்ந்த ஆண்கள் தாங்கள் எல்லோரையும் விட வலுவுள்ளவர்கள் என்றும் தங்களை யாரும் தொட முடியாது என்றும் எண்ணுகிறார்கள்.

ஏன் இங்கு blooding என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது? இந்தச் சொல்லுக்கு ஆதியானது என்ற ஒரு பொருள் இருக்கிறது. மனிதர்களை மிருகங்களாக்கும் ஒரு தன்மை இந்தச் சொல்லுக்கு இருக்கிறது. வயதுக்கு வரும் ஒரு சடங்கில் ஒரு உயர்ந்த நோக்குக்காக பலியிடப்படக்கூடிய மிருகங்கள் என்ற நிலைக்கு சாதாரண மக்களை இது தாழ்த்தி விடுகிறது. இந்த விசேட படையணி பயன்படுத்தும் blooding,  ‘போர்வீரர் கலாச்சாரம்”, சுலு (Zulu) போன்ற சொற்கள் காலனீய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளோடு தொடர்புபட்டவையாகும்.

அவுஸ்திரேலிய மக்கள் இப்படிப்பட்ட விடயங்களுடன் நன்கு பரிச்சயப்பட்டவர்கள். உண்மையில் பூர்வீகக் குடிகளுக் கெதிராக மிக மோசமான வன்முறைகளில் ஈடுபட்ட வரலாறு இவர்களுக்கு இருக்கிறது.

சாகசங்களை மேற்கொள்ளல், புதிய இடங்களைக் கண்டுபிடித்தல் எந்தவித கடிவாளமும் இல்லாத வகையில் வன்செயல்களில் ஈடுபடுதல் போன்ற முன்னைய ஏகாதிபத்திய காலத்தில் வளர்ந்த ஆண்கள் கொண்டிருந்த குறிக்கோள்களை இன்;றும் மீண்டும் ஒரு தடவை, வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தேடிச் செல்வதையே இது வெளிப்படுத்துகின்றது. இதிகாசங்கள் கூறுவது போன்று, ஆப்கானிஸ்தான் ‘ஏகாதிபத்தியங்களின் புதைகுழி” அல்ல. இங்கு தான் ஏகாதிபத்தியவாதிகள் எந்தவித சட்டபூர்வமான அல்லது அறநெறி ரீதியிலான கட்டுப்பாடுகளும் இன்றி தமது இருண்ட கற்பனைகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதைக் காணமுடிகிறது.

காலனீய காலங்களில் வெள்ளை இனத்தவர்கள் மனிதர்கள் உள்ளடங்கலாக வெற்றிச் சின்னங்களைத் தேடிச்சென்ற நேரங்கள் இருந்தன. இன்று அவர்கள் இறந்த ஆப்கான் மக்களின் உடற்பாகங்களைச் சேகரித்து அவர்களது செயற்கை அவயவங்களை குடிபானங்களைப் பருகப்பயன்படுத்தும் குவளைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.

நிலக்கண்ணி வெடிகளால் சூழப்பட்டு, உடல் அங்கங்கள் பலவற்றை இழந்து, செயற்கை அவயவங்களை இலகுவில் பெறமுடியாத சூழலில் வாழும் ஏராளமான மக்களைக்  கொண்ட ஆப்கானில், பிளாஸ்ரிக் பொருட்கள் உட்பட உடற்பாகங்களைப் பறித்து எடுக்கும் மனப்பாங்கு உண்மையில் ஓர் உளரீதியான நோயையே சுட்டிக்காட்டுகிறது. இறந்த ஒரு ஆப்கானிஸ்தான் வாசியிடமிருந்து களவாக எடுக்கப்பட்ட செயற்கைக் காலைப் பார்த்தவர்கள் அல்லது அது உண்மையில் எங்கிருந்து வந்தது என்ற விடயத்தை அறிந்தவர்கள் அதிலே பியர் பானத்தைக் குடித்து மகிழ்ந்தது பார்க்கும் போது, அவுஸ்திரேலியர்கள் பற்றி என்ன சொல்வதென்றே எனக்குப் புரியவில்லை.

இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டில் ரைம் (Time Magazine) சஞ்சிகையின் முன்பக்கத்தில் தோன்றிய ஐஷா மொஹமட்ஷாய் (Aisha Mohammedzai) என்ற ஆப்கான் பெண் பிள்ளையை நினைத்துப் பார்க்கிறேன். இந்தப் பெண்பிள்ளை வான ஊர்தியில் அமெரிக்காவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவருக்கு பிளாஸ்ரிக்கிலான மூக்கு பொருத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில் பிளாஸ்ரிக்கிலான உடற்பாகங்கள் மிகவும் பெறுமதி வாய்ந்தவையாகும். வெள்ளை இனத்து ஆண்கள் இவற்றை பரிசுகளாகக் கொடுப்பார்கள். அதே வேளையில் தண்டனையாக அவற்றை எடுத்துச் செல்வார்கள்.

வெள்ளை இனத்து ஆண்கள் தங்கள் விருப்பம் போல் ஆட்களைக் கொன்று, இறந்தவர்களின் உடற்பாகங்களை வெட்டி, உடற்பாகங்களைக் களவாடிப் பினனர் வீரர்களாகப் பவனி வருவது தான் இந்தக் கதையின் மிகவும் மோசமான பக்கமாகும்.

போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை மலையாக உயர்ந்து செல்லும் பின்னணியிலும் ஆப்கானிஸ்தான் போரிலே மேற்குல இராணுவத்தை மீட்பர்களாகக் காண்பிக்கும் போக்கே இன்றும் மேலோங்கிக் காணப்படுகிறது.

பொய்கள் மேல் கட்டியெழுப்பப்பட்டு, ஈராக் நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புப் போர் இறுதியில் ‘தவறான ஒரு போராகவே” பார்க்கப்பட்டது. இதற்கு மாறாக, ஆப்கானிஸ்தானிலே முன்னெடுக்கப்பட்ட போர் சரியானதொரு போராகவே பார்க்கப்பட்டது. ஈராக் போர் தொடர்பாகப் பொய்களே சொல்லப்பட்டன என்பதைக் கண்டறிந்த போர் எதிர்ப்பு இயக்கத்தினர் ஆப்கானிஸ்தானிலே போரை முன்னெடுத்தவர்கள் நல்ல நோக்கத்தோடு முன்னெடுத்தார்கள் என்று சொல்வதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

முஸ்லிம் ஆண்களிடமிருந்து முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்கவே ஆப்கானிஸ்தானிலே தாம் போரை முன்னெடுப்பதாக மேற்குலகம் வியாக்கியானம் செய்கிறது. ஆனால் ஆப்கானிஸ்தானில் போரை முன்னெடுப்பதற்கு தொடக்கத்தில் சொல்லப்பட்ட காரணம் வேறாக இருந்தது. அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குக் காரமான ஒசாமா பின் லாடனை ஆப்கான் பாதுகாத்து வைத்திருந்ததன் காரணத்தினால் தற்பாதுகாப்புக் கருதி போரை முன்னெடுப்பதாகவே அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தொடக்கத்தில் அறிவித்திருந்தன.

ஆனால் ஒரு தற்காப்புப் போரை முன்னெடுப்பதற்கான சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெறுவதற்கான நிபந்தனைகள் எதுவும் அந்நேரத்தில் பூர்த்திசெய்யப்பட்டிருக்கவில்லை. ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் அமெரிக்கா மீது எந்தவித ஆயுதத் தாக்குதல்களுக்கான ஆபத்தும் இருக்கவில்லை. போரை அங்கீகரிக்க பாதுகாப்புச் சபை கூடியிருக்கவில்லை. ஆப்கான் வலிந்து போரை முன்னெடுக்கும் ஒரு நாடாகவும் இருக்கவில்லை. பின் லாடனைப்  பாதுகாக்கும் விடயம் போரை முன்னெடுக்கப் போதுமானதாக இருக்கவில்லை. அது மட்டுமன்றி இவ்விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு தலிபான்கள் தயாரான நிலையில் இருந்ததையும் மறுப்பதற்கில்லை.

போர் தொடங்கப்பட்ட போது, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போரை நடத்துவதற்கான சட்டபூர்வமான அங்கீகாரம் தொடர்பாக ஒரு தெளிவற்ற நிலையில் இருப்பதை அறிந்திருந்தார்கள். போரை முன்னெடுப்பதற்கான காரணம் தற்காப்பு என்ற நிலையிலிருந்து, ஆப்கான் பெண்களைப் பாதுகாப்பது என்றும் தலிபான்களை விரட்டுவதாகவும் மாறியது. போரின் சட்டவிரோதத்தன்மையை மறைப்பதற்காக மனித நேயக் காரணங்கள் கற்பிக்கப்பட்டன.

இந்த மனித நேயப் பாசாங்கு, ஆப்கான் மக்களுக்கு இருந்த தற்பாதுகாப்பு உரிமையையும் தன்நிர்ணய உரிமையையும் நீக்கியிருக்கிறது. ‘சரியான போர்” என்ற கண்ணோக்கு மிகக் கவனமாகப் பேணப்படுவதுடன் ஆப்கான் பெண்களது பாதுகாப்பு என்பது ஒரு கொள்கையாக்கப்பட்டிருக்கிறது. இந்த மனிதநேயப் பார்வையுடன் இணைந்து செல்லாத ஆப்கான் மக்களின் அரசியல் பார்வையும் தங்கள் எதிர்காலம் தொடர்பான அவர்களது    தூரநோக்குப் பார்வையும் ஆபத்தானதாகவே பார்க்கப்படுகின்றது.

மிகக் கொடூரமான போர்க்குற்றங்கள் தொடர்பான சான்றுகள் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்ற இந்த நேரத்திலும் கூட, அவுஸ்திரேலியர்களை உள்ளடக்கிய மேற்குலகத்தினர் ஆப்கானிஸ்தானில் தாங்கள் ஒரு சரியான போரையே நடத்துகின்றோம் என்ற இனவாதம் மிக்க கற்பனையைக் கொண்டிருக்கும் அதே வேளையில் போர் நடைபெறும் பிரதேசத்தை வரையறை செய்யும் தார்மீக அதிகாரம் தமக்கு இருக்கிறது என்றும் யார் அப்பாவிப் பொதுமகன், யார் தலிபான் என்பதையும் தீர்மானிக்கும் அதிகாரமும் தமக்கு இருக்கிறது என்றும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த இருளின் நடுவில் இந்த வரையறைகளுக்கு எந்தப் பொருளும் கிடையாது. இந்த வரையறைகளை உருவாக்கும் நாடுகள் ஆதிக்கத்தை மேற்கொள்ள பயன்படுத்தும் உருமறைப்பு உபாயங்களே இவையாகும். ஆப்கான் மக்களைப் பொறுத்த வரையில் இதுவே இந்த விசாரணை வெளிப்படுத்தியிருக்கும் அப்பட்டமான உண்மையாகும்.

 

நன்றி: அல்ஜசீரா

 

 

Exit mobile version