ஆசியா பிராந்திய பூகோள அரசியலில் சிறீலங்காவின் நடுநிலைத்தன்மை நிலைக்குமா? – வேல்ஸ்சில் இருந்து அருஸ்

தமது அதிகாரங்களை மையமாகக்கொண்டும், சிங்கள மக்களின் நலன்களை முன்நிறுத்தியும் காலம் காலமாக கொண்டுவரப்படும் அரசியல் திருத்தங்களின் பட்டியலில் 20 ஆவது திருத்தச்சட்டமும் இணைந்துள்ளது.

1978 களில் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவினால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் பதவிக்கான அத்தனை சலுகைகளையும் தற்போதைய புதிய சட்டம் மீண்டும் வழங்கியுள்ளது. ஜே.வி.பியின் அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்ட 17 ஆவது திருத்தச்சட்டத்தின் சரத்துக்களையும், ரணிலின் பதவிக்கான அதிகாரத்தை குவிப்பதற்கு அனுசரணை வழங்கிய 19 ஆவது திருத்தச்சட்டத்தையும் தற்போதைய புதிய சட்டம் இல்லாது செய்துள்ளது.

அதிகாரங்களை அதிகரிக்கும் அடிப்படைக் கோட்பாடுகளை கொண்டதாகவே சிறீலங்காவின் அரசியல் சட்டங்கள் வரையப்பட்டுவருகின்றன. அற்கு 17 ஆவது திருத்தச்சட்டமும், 19 ஆவது திருத்தச்சட்டமும் கூட விதிவிலக்கு அல்ல. 17 ஆவது திருத்தச்சட்டமானது சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரங்களை வழங்கும் சட்டமாகும். அதன் மூலம் தென்னிலங்கை சிங்கள கட்சிகள் தேர்தல் சுயாதீனமாக இதுவரை இடம்பெற்றதாக திருப்தியடைந்து வந்தன. இதனை கூட சந்திரிக்க நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரவில்லை.

ஜே.வி.பி யின் ஆதரவை பெற்று தனது அதிகாரத்தை தக்கவைப்பதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கை அது. மேலும் சிறீலங்காவின் நீதித்துறை, காவல்துறை, தேர்தல் ஆணையகம் போன்றவை அரசியல் தலையீடுகள் இல்லாது சுயாதீனமானதாக மாற்றப்பட வேண்டும் என்று மேற்குலகம், குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியமும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களும் தொடர்ந்து விடுத்துவந்த கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் தமது பொருளாதார நலன்களை பேணுவதற்கு சிறீலங்கா அரசு மேற்கொண்ட நடவடிக்கை அது. எனவே தான் அதன் மூலம் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சபையினை பின்னர் தானே இல்லாது செய்தது சிறீலங்கா அரசு.

2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச்சட்டம் கூட பிரதமருக்கான பதவியை அதிகரிக்கும் ரணில் அதிகாரக் குவிப்பு சிந்தனையின் கோட்பாடாகவே பார்க்கப்பட்டது. தான் அரச தலைவரானதும் 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் நடைமுறையை இல்லாது செய்வேன் என தெரிவித்த சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறீசேனாவால் செய்ய முடிந்தது 19 ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்ததே தவிர வேறு இல்லை. அதாவது அவரும் தனது பதவியினை அனுபவிக்கவே முற்பட்டுநின்றுள்ளார்.

ஜே.ஆர் 1978 ஆம் ஆண்டு கொண்டுவந்த நிறைவேற்று அதிகாரமுள்ள அரச தலைவர் முறையுடன் ஒத்துப்போகாததால் 17 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தங்களால் நிலைத்து நிற்க முடியவில்லை. 17 ஆவது திருத்தச்சட்டம் பல தடைவகைள் பின்னடைவைச் சந்தித்ததுடன், தற்போது மீண்டும் காணாமல்போயுள்ளது. அதாவது 17 ஆவது மற்றும் 19 ஆவது திருத்தங்கள் கூட அன்றைய ஆட்சியாளர்களின் அதிகாரத்தினை தக்கவைப்பதற்காக கொண்டுவரப்பட்டவையே தவிர ஜனநாயக நடைமுறைகளுக்காக அல்ல.

Gota military ஆசியா பிராந்திய பூகோள அரசியலில் சிறீலங்காவின் நடுநிலைத்தன்மை நிலைக்குமா? - வேல்ஸ்சில் இருந்து அருஸ்எனினும் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டமானது முன்னைய திருத்தச்சட்டங்களை விட அதிக அதிகாரங்களை குடும்ப அரசியலுக்கு வழங்கியுள்ளது. இரட்டைக்குடியுரிமை உள்ள பசில் ராஜபக்சா நாடாளுமன்றம் செல்ல அது வழிவகுத்துள்ளது. ராஜபக்சா குடும்பத்தில் உள்ளவர்களில் பலர் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள். மேலும் 1985 ஆம் ஆண்டு பிறந்த மகிந்தா ராஜபக்சாவின் புதல்வர் நமால் ராஜபக்சாவை அரச தலைவராக்கவும், அதற்கு பின்னுள்ள அவரின் சகோதரர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கவும் ஏதுவாக அரச தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வயது எல்லையும் 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் எல்லாம் தமிழ் மக்களை பாதிக்குமா என்றால் அதன் விளைவுகள் குறைவானதே. ஏனெனில் தமிழ் இனம் மீதான இனஅழிப்பை மேற்கொள்வதற்கு சிங்கள அரசுகளை எந்த சட்டமும் தடுப்பதில்லை. எந்த சட்டங்களையும் அவர்கள் மதிப்பதுமில்லை. எனவே இந்த சட்டங்கள் காலப்போக்கில் சிங்களதேசத்திற்கு ஆபத்தானதாக மாற்றமடையலாம்.

இதனிடையே, சிறீலங்காவின் தற்போதைய இந்த மாற்றங்கள் என்பது சிறீலங்கா சந்தித்துள்ள பூகோள அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள உறுதுணைவழங்குமா என்பது கேள்விக்குறியே. சீனாவின் 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்த தடை என்பது முழுமையாக நிறைவேற்றப்பட்டால் அது சிறீலங்காவை கடுமையாக பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஏனெனில் சிறீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமன நிலையம், கொழும்பு துறைமுக நகரம் போன்றவற்றை அபவிருத்தி செய்த நிறுவனமும் இதில் அடங்கும். தேர்தலுக்கு முன்னரே ராஜபக்சாக்களின் ஆட்சிக்கு அதிக ஆதரவுகளை வழங்குவதைபோல காட்டிக்கொண்ட அமெரிக்க அரசு தற்போது மறுவளமாக தடையையும் கொண்டுவந்துள்ளது.

இந்தோ-பசுபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்துள்ள இந்தியா, அமெரிக்கா, யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா கூட்டணியிற்கு வலுச்சேர்ப்பதே இந்த தடையின் நோக்கம். இந்த தடையினை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் சிறீலங்கா அரச தலைவருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடியிருந்தார்.

UN Indi Jap Aus ஆசியா பிராந்திய பூகோள அரசியலில் சிறீலங்காவின் நடுநிலைத்தன்மை நிலைக்குமா? - வேல்ஸ்சில் இருந்து அருஸ்இந்த உரையாடலில் சீனாவின் தொலைதொடர்பு கட்டுமான நிறுவனம் மீதான தடை தொடர்பான விடயங்களும் இடம்பெற்றிருக்கும்; ஆனால் அதனை ஊடகங்களுக்கு அவர்கள் வெளியிடவில்லை. மிலேனியம் சலஞ் உடன்பாட்டுடன் ஏனைய இரு படைத்துறை உடன்பாடுகளான Acquisition and Cross Service Agreement (ACSA) and the Status of Forces Agreement (SOFA) போன்றவற்றையும் சிறீலங்கா அரசு நியைவேற்ற வேண்டும் என்பதில் அமெரிக்கா விடாப்பிடியாக உள்ளது. ஆனால் அதனை எதிர்ப்பதே ராஜபக்சாவின் கட்சிகளே. தற்போது பௌத்த துறவிகளும் அதில் இணைந்துள்ளனர்.

எனினும்; சிறீலங்காவை இந்தியாவின் ஒரு பகுதியாகவே இந்த நான்கு நாடுகளின் கூட்டணி பார்க்கின்றது. எனவே தான் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தை இந்தியா முன்வைத்திருந்தது. சீனாவிடம் வாங்கிய அதிக கடன்கள், அதனுடன் மேற்கொண்ட உடன்பாடுகள், சீனாவுக்கும் சிறீலங்காவுக்குமிடையிலான பௌத்த மத பிணைப்புக்கள் என்பன சிறீலங்காவை இந்த நான்கு நாடுகளின் கூட்டணியில் இருந்து தள்ளி இருக்கவே வழிவகுக்கும்.

எனவே தான் தற்போது தோன்றியுள்ள பூகோள நெருக்கடியில் தாம் முதன்மை பெற்றுள்ளதாக மார்தட்டிக்கொண்டுள்ள சிறீலங்கா அரசு தாம் நடுநிலையை பேணப்போவதாக தெரிவித்துள்ளது. அதனை தான் சிறீலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சரும் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் சீனா மீதான அமெரிக்காவின் தடைகள் இறுகும்போது சிறீலங்கா தனது நடுநிலை தன்மையை முற்றாக துறக்கவேண்டிய நிலை எற்படும் என்பதே இங்கு யதார்த்தமானது.