ஆசனப் பங்கீட்டில் கட்சிகளிடையே முரண்பாடு இல்லை: மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளுக்கு இடையில் ஆசனப் பங்கீடு தொடர்பில் இணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, இது தொடர்பில் கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் கூடிய ஆராய்ந்து எதிர்வரும் 3 ஆம் திகதி இறுதி முடிவை அறிவிக்க உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டம், யாழ் மார்டின் வீதியிலுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. சுமார் இரண்டு மணி நேரமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் முடிவில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான ஊடகங்களுக்கு மாவை சேனாதிராசா எம்.பி. கருத்து தெரிவிக்கையில் –

“கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் அண்மையில் ஒரு கூட்டமொன்று நடை பெற்றிருந்தது. அந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இன்றைய இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கமைய நேற்றுக் கூடிய பங்காளிக் கட்சிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தத்தமது கோரிக்கைகள் அல்லது நிலைப்பாடுகளைத் தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக கூட்டமைப்பிலுள்ள இந்த மூன்று கட்சிகளுக்குமான ஆசனப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருக்கின்றோம். அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களில் ஆசனங்களை – அதாவது வேட்பாளர்களை ஒதுக்குவது – தொடர்பாக நாங்கள் பெரும்பாலும் ஓர் இணக்கத்தை அடைந்திருக்கின்றோம்.

மீண்டும் 3 ஆம் திகதி நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் கொழும்பிலே நாங்கள் கூடிஇறுதி தீர்மானத்தை எடுக்க வாய்ப்பிருக்கின்றது. எல்லோரும் சிறந்த முறையில் தங்களது கருத்தக்களை முன்வைத்திருக்கிறார்கள். அதனால் சிறந்த முறையில் தீர்மானம் எடுப்பதற்கு அடித்தளமிடப்பட்டிருக்கின்றது” என்றார்.