அவுஸ்திரேலியா சிட்னியில் கைதான தமிழ் அகதி இளைஞன் பெர்த்தில் தடுத்துவைப்பு

ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரியிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் சிட்னியில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள Yongah Hill குடிவரவு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது.

இலங்கைப் பின்னணிகொண்ட கஜேந்திரன் மோகன் அல்லது கண்ணா என்ற 31 வயது இளைஞர் இந்தியாவிலுள்ள அகதிகள் முகாமில் பிறந்தவர் எனவும் 2013ம் ஆண்டு படகுமூலம் ஆஸ்திரேலியா வந்து புகலிடம் கோரியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்ணாவின் bridging விசா கடந்த 2017ம் ஆண்டு காலாவதியாகிவிட்டதாகவும், அதைத்தொடர்ந்து அவருக்கு மருத்துவம் உள்ளிட்ட அரச உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை எனவும், வேலை செய்வதற்கான உரிமையும் மறுக்கப்பட்டதால் தங்குமிடம் மற்றும் வாழ்வாதார வசதிகளின்றி இவர் அல்லல்பட்டுவந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக கடந்த 3 ஆண்டுகளாக கடும்நோய்வாய்ப்பட்டிருந்த கண்ணா 6 மாதங்களில் 20 கிலோ எடை குறைந்ததாகவும், ஒருவகை காச நோயினால் இவர் பீடிக்கப்பட்டிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததாகவும் தமிழ் ஏதிலிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாவுக்கான கண்ணாவின் விண்ணப்பம் இவ்வருட ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப்பின்னணியில் கண்ணா சிட்னியிலுள்ள தனது நண்பர்களைச் சந்திக்கச்சென்றபோது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு யங் ஹில் தடுப்பு மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டதாகவும், ஒரு வாரம்வரை இவர் எங்கே இருக்கிறார் என்பதைத் தெரியப்படுத்தவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணா இந்திய அகதிகள் முகாமில் பிறந்தவர் என்பதால் இவருக்கு இந்தியக் குடியுரிமையோ அல்லது இலங்கை குடியுரிமையோ இல்லை எனவும் இவர் நாடற்றவராகவே கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கண்ணாவை திருப்பி அனுப்புவதிலும் சிக்கல் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்ணாவின் மருத்துவநிலைமை மற்றும் அவரது பின்னணியைக் கருத்திற்கொண்டு அவருக்கு ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா வழங்கப்படவேண்டுமெனவும், அவர் யங் ஹில் தடுப்பு மையத்திலிருந்து விடுதலைசெய்யப்பட்டு சிட்னிக்கு அழைத்துவரப்பட வேண்டுமெனவும் தமிழ் ஏதிலிகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

சிட்னியில் பல நண்பர்கள் இருப்பதால் அவர்களது உதவி கண்ணாவுக்கு கிடைக்கும் என தமிழ் ஏதிலிகள் கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. கண்ணாவின் விடயத்தில் உள்துறை அமைச்சர் கரென் அன்ரூஸை தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.