அவுஸ்திரேலியா: காவலாளி நடந்துகொண்ட முறை குறித்து அச்சம் தெரிவித்துள்ள தமிழ் பெண் அகதி

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள பிரியா குடும்பம் தமது சட்டப்போராட்டத்தை தொடர்கின்ற நிலையில், பிரியா அவரது கணவர் நடேஸ் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளான கோபிகா, தருணிகா ஆகியோர் கடந்த பல மாதங்களாக கிறிஸ்மஸ் தீவு தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தனது தங்குமிடத்திற்கு வந்த Serco காவலாளி ஒருவர் அறை வாசலில் நின்றவாறு ஒருவித இச்சையுடன் பார்த்ததாகவும், அவரது நோக்கம் பாலியல் ரீதியாக தன்னை அணுகுவதாக இருக்கலாம் என்பதை உணர்ந்தவுடன் பாதுகாப்பு கருதி உடனடியாக அவரைத் தாண்டி அறைக்கு வெளியே தான் சென்றுவிட்டதாகவும் பிரியா பிபிஸி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் Serco நிர்வாகத்திற்கு முறையிட்டதையடுத்து குறித்த காவலாளி அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டதாகவும் ஆனால் பிரியா தொடர்ந்தும் தனது பாதுகாப்பு தொடர்பில் அச்சத்துடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.