Home செய்திகள் அலரி மாளிகை கூட்டத்தை ஏன் புறக்கணிக்கிறோம்;மனோகணேசன் விளக்கம்

அலரி மாளிகை கூட்டத்தை ஏன் புறக்கணிக்கிறோம்;மனோகணேசன் விளக்கம்

“நாம் கோருவது, சபாநாயகர் தலைமையில், பாராளுமன்ற கூட்டம். இங்கே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டம், பிரதமர் தலைமையில் எம்பிக்கள் கூட்டம். இதற்கு எந்தவித உத்தியோகப்பூர்வ அந்தஸ்தும் கிடையாது. பிரதமர் வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டலாம். அல்லது, அவரது ஆளும் கட்சி எம்பீக்களை கூட்டி பேசலாம். இவை எப்போதும் நடக்கின்ற கூட்டங்கள் ஆகும்” என முன்னர் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் தனது முகநூலில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் பின்வருமாறு தெரிவித்திருக்கின்றார்:

“திங்கட்கிழமை 4ம் திகதி பிரதமரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ‘அனைத்து எம்பீக்கள்’ கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ளாது. தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஜேவீபியும் கலந்துகொள்ளாது என எண்ணுகிறேன். எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜேவீபி பற்றிய நிலைப்பாடுகளை அவ்வந்த கட்சிகள்தான் சொல்ல வேண்டும்.

யூஎன்பி கலந்துக்கொள்ளும் என அக்கட்சியின் செயலாளர் இன்று காலை கூறி இருந்தாலும், அக்கட்சியின் நிலைப்பாடு மாற இடமுண்டு. எது எப்படி இருந்தாலும், மிகப்பெரும்பான்மை எம்பீக்கள் எம்வசமே உள்ளார்கள். அவர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள்.

நாம் கோருவது, சபாநாயகர் தலைமையில், பாராளுமன்ற கூட்டம். இங்கே எமக்கு அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டம், பிரதமர் தலைமையில் எம்பிக்கள் கூட்டம். இதற்கு எந்தவித உத்தியோகப்பூர்வ அந்தஸ்தும் கிடையாது. பிரதமர் வேண்டுமானால், மீண்டும் ஒருமுறை கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டலாம். அல்லது, அவரது ஆளும் கட்சி எம்பீக்களை கூட்டி பேசலாம். இவை எப்போதும் நடக்கின்ற கூட்டங்கள் ஆகும்.

ஆனால், சபாநாயகர் தலைமையில் நடைபெறும், கூட்ட நிகழ்ச்சி நிரல் கொண்ட, உத்தியோகப்பூர்வ அந்தஸ்து கொண்ட, பாராளுமன்ற கூட்டத்தில் பேசும் விடயங்களை, பிரதமர் தலைமையிலான எம்பிக்கள் கூட்டத்தில் பேசி எதுவும் ஆக போவதில்லை.

பிரதமரின் அழைப்பை ஏற்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நாம் கலந்துகொண்டு தெரிவித்த யோசனைகள் எதுவும் இதுவரை அரசாங்கத்தால் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும் கருத்தில் கொண்டுதான் நாம் எமது இந்த நிலைபாட்டை எடுத்துள்ளோம்.

தேசிய இடர் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை, மக்கள் மத்தியில் ஏற்புடைமை பெற்று வருவதை கண்ட அரசாங்கம் பதட்டமடைந்து, அதை சமாளிக்க செய்யும் தந்திரமாகவே இதை நாம் பார்க்கிறோம். இதில் நாம் அகப்பட மாட்டோம்.

இந்த அரசாங்கத்திடம் தொடுக்க எமக்கு நிறைய கேள்விகள் உள்ளன.

கொரோனா நிவாரணத்துக்கு எவ்வளவு வெளிநாட்டு நிதி வந்தது? எவ்வளவு உள்நாட்டு நிதி வந்தது? அவற்றை என்ன செய்தீர்கள்?

இந்நாட்டில் உண்மையில் எத்தனை கொரொனா நோயாளர் உள்ளனர்? எத்தனை முதற்தொற்றாளர் உள்ளனர்? ஒரு நாளைக்கு எத்தனை பேரை பரிசோதனை செய்கிறீர்கள்?

பரிசோதனை செய்யும் உபகரணங்கள் இந்நாட்டில் எத்தனை உள்ளன? எத்தனை இன்னமும் தேவை?

வாழ்வாதார நிவாரணம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு தருவதில் ஏனிந்த குழப்பம்? முதல் மாதம் கடந்து விட்ட நிலையில் ஐயாயிரம் போதாதே? இனி ஒரு குடும்பத்துக்கு அடுத்த தவணையாக பதினைந்தாயிரம் கொடுக்க முடியுமா?

வாடகை வீடுகளில் உள்ளோர், தேர்தல் பதிவில் இல்லாதோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு ஏன் நிவாரணம் வழங்கப்படுவதில்லை?

சுகாதார துறையினர், பாதுகாப்பு துறையினர் ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு உடைகள், உபகரணங்கள் உள்ளனவா?

ஊரடங்கு காரணமாக முடங்கி போன தொழில் வர்த்தக நிறுவனங்களுக்காக ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட வர்த்தக சலுகைகள் முறைப்படி கிடைப்பதில்லை என்ற புகாருக்கு உங்கள் பதில் என்ன? வங்கிகள், அரச நிறுவனங்கள் ஆகியவை இவை தொடர்பான ஜனாதிபதியின் பணிப்புரைகளை கடை பிடிக்கின்றனவா?

ஜனாதிபதியின் விலைவாசி அறிவிப்புகள் ஒழுங்குகள் கடை பிடிக்கப்படுகின்றனவா?

ஏனைய உயிர்கொல்லி நோய்களுக்கான மருந்துகளின் தட்டுப்பாடு எப்போது நீங்கும்?

உணவு தட்டுப்பாடு வருமா? வந்தால் எப்படி சமாளிப்பது?

மேல்மாகாணத்தில் சிக்கியுள்ள வெளி மாவட்டத்தோர் பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன? மேல்மாகாண, நகர பொலிஸ் நிலையங்களில் இவர்களது விபர பதிவுகள் இருப்பதால், ஊர் திரும்பும் வரை இவர்களுக்கு பொலிஸ் நிலையங்கள் ஊடாக நிவாரணம் வழங்க முடியுமா?

இல்லாவிட்டால் மத்திய, சப்ரகமுவ, வடக்கு, கிழக்கு மாகாண எல்லைகளில் தனிமை நிலையங்களை அமைத்து, இவர்களில் அவ்வந்த மாகாகாணத்தவர்களை அங்கே கூட்டி சென்று, தங்க வைத்து, பின் பரிசோதனை செய்து, வீட்டுக்கு அனுப்ப முடியுமா?

ஆகிய கேள்விகளுக்கு பதில்கள் தேவை.

தெருவில் நின்று அல்லது ஊடகங்களில் நாம் கேள்வி கேட்டால், இந்த அரசின் அமைச்சர்களுக்கு பதில் கூற வேண்டிய கடப்பாடு இல்லை. ஆகவே பதில் கூற மறுக்கிறார்கள். கேள்வி கேட்டால் கைது செய்வோம் என்கிறார்கள்.

ஆனால், பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டால் இவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்.

ஆகவே இவை பற்றி கேள்வி எழுப்பி, விவாதம் செய்து, வெளிப்படையாக பேச பாராளுமன்றம் கூட வேண்டும் என கோருகிறோம்.

இது தொடர்பான ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டறிக்கை இன்று வெளியாகும்.”