அரச சார்பற்ற 23 நிறுவனங்கள் மீது சி.ஐ.டி., ரி.ஐ.டி. கடும் விசாரணை – தடை செய்ய திட்டம்

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 23 அரச சார்பற்ற தேசிய, சர்வதேச நிறுவனங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் சட்டத்தரணி ராஜா குணரத்ன தெரிவித்தார்.

நாட்டில் செயற்பட்டுவரும் குறித்த 23 நிறுவனங்களையும் தடைசெய்வதற்கு 1980 ஆம்ஆண்டு 31 ஆம் இலக்க தன்னார்வ சேவைகள் பதிவு மற்றும் கண்காணிப்பு சட்டத்தின் படி வாய்ப்பு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;

“இந்த அமைப்புக்களை அவசர சட்டத்தின் கீழ் தடை செய்வதற்கு ஏதுவான வாய்ப்புக்கள் உள்ளன. ஆயினும், தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்து இந்த அமைப்புக்களை தடைசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த அமைப்புக்கள், மத, சமூக, சுகாதார மற்றும் சுற்றால் என்ற போர்வையில் மததீவிரவாதத்தை தூண்டும் நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றன. அத்துடன், இந்த அமைப்புக்களின் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டடால், 200, 500 ரூபாவே தண்டப்பணமாக காணப்படுகின்றது.

மேலும் நாட்டில் 37 ஆயிரம் அரச சார்பற்ற நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 980 நிறுவனங்களினால் இந்த நாட்டிற்கு எந்தபயனும் இல்லை. அதனால், அந்த நிறுவனங்களை தடை செய்ய வேண்டியது அவசியமானதாகும். அத்துடன் அண்மையில் தடைசெய்யப்பட்ட 11 நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் குறித்த 32 நிறுவனங்களில் உள்ளடங்குகின்றன.

இந்நிலையில் குறித்த தடை செய்யப்பட்டுள்ள முஸ்லீம் அமைப்புக்களின் வங்கிக்கணக்குகளில் இருந்த கோடிக்கணக்கான பணமும் முடக்கப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் சட்டமா அதிபரினால் 11 அமைப்புக்களுக்கு கடந்த 7ஆம் திகதி தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.