Tamil News
Home செய்திகள் அரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கஜேந்திரகுமார் அறிவிப்பு

அரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாக கஜேந்திரகுமார் அறிவிப்பு

நடைபெறவுள்ள அரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்க தமது  கட்சி முடிவெடுத்துள்ளதாக   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

யாழ் கொக்குவிலுள்ள தமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை மாலை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான வேட்பாளர்கள் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களுடைய கருத்துக்களை பார்த்தால் பிரதானமாக மூன்று கட்சிகளின் வேட்பாளர்களின் நிலைப்பாடு பொதுவானதாகவே உள்ளது.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற விடையமும் அதற்கு மேலதிகமாக பிரதான இரண்டு கட்சிகளும் இலங்கை என்ற நாடு ஒற்றையாட்சி நாடாக மட்டும் தான் இருக்கமுடியும் அந்த ஒற்றையாட்சித் தன்மையை பலப்படுத்துவது தான் தமது நோக்கம் என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலை யுத்தம் என்ற விடயத்தில் அவர்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டை காப்பாற்றிய ஒரு விடையமாகவும் அதில் போரிட்ட இராணுவமும் முப்படையினரும் போர் வீரர்கள் என்றும் அப் போர் வீரர்களை எக்காரணம் கொண்டும் எந்த நீதிமன்றத்திலும் நிறுத்தி விசாரிப்பதற்கு தயார் இல்லை என்றும் அவர்களுடைய கௌரவத்தை இன்னும் உறுதிப்படுத்துவது தான் தங்கள் நோக்கம் என்ற விடையத்தையும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.

இந்தப் பின்னணியில் தமிழ் மக்களாகிய எங்களைப் பொறுத்தவரையில் இரண்டு விடையங்கள் முக்கியமானவை. அதாவது அரசியல் தீர்வு. அதில் விசேடமாக ஒற்றையாட்சியை நிராகரித்து தமிழ்த்தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற தமிழ்த்தேசத்தின் இறைமை அடிப்படையில் ஒரு சமஷ்டித் தீர்வுதான் எங்களுக்குத் தேவையான விடையம். இவை மட்டும்தான் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கட்டமைப்பு சார்ந்த இன அழிப்பிலிருந்து எமது மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக ஏற்கனவே இடம்பெற்றிருந்த இன அழிப்பு முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் அத்தகைய சம்வங்கள் தொடராமல் இருப்பதற்கு நாங்கள் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை செய்தே ஆக வேண்டும். அவ்வாறு செய்வதே எதிர்காலத்தில் யாரும் கடந்த காலத்தைப் போன்று தமிழ் மக்களை அழிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையாக பெறுப்புக்கூறல் நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளாக அடையாளம் கண்டு அவர்களுக்குத் தண்டனை வழங்கும் செயற்பாடு அமையும்.

இவை இரண்டும் தான் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இன்று நடக்கும் அத்தனை நடவடிக்கைகளுக்கும் தீர்வைக் கொடுக்கும் இதில் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. ஆனால் இவை எதனையும் கருத்திற்கொள்ளாது சிங்கள வேட்பாளர்கள் நேர் எதிரான செயற்பாடுகளை தங்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்திய மாநாடுகளில் தீர்மானங்களை எடுத்துள்ளார்கள். அதுமட்டுமன்றி எந்தவிதமான நிபந்தனைகளுக்கும் இணங்கப் போவதில்லை எனவும் எவருடனும் எந்தவிதத்திலும் ஒப்பந்தங்கள் எழுத்து மூல உடன்படிக்கைகள் செய்யத் தயார் இல்லை என அறிவித்துள்ளனர்.

இத்தகைய நிலையில் தமிழ் மக்களுக்கு யோசிப்பதற்கு ஒன்றுமேயில்லை. நாங்கள் தமிழ் மக்களுடைய நலன்கள் என்று பார்ப்பதானால் எங்களுக்கு இந்தத் தேர்தலில் எவ்விதமான அக்கறையும் இருக்க முடியாது. எங்களுக்குரிய தேர்தல் இதுவல்ல என்பதுதான் இன்றைக்குள்ள யதார்த்தம். எனவே எங்களுடைய அமைப்பின் நிலைப்பாடு இந்தத் தேர்தலை பகிஷ்கரிப்பதுதான் முடிவு. இதற்கு மாற்று வழி எதுவும் இல்லை.

ஆனால் பகிஷ்கரிப்பு என்ற விடையம் கடும் போட்டி ஏற்படுகின்ற வேட்பாளர்கள் மத்தியில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற முடிவாக இருக்கலாம். தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாமல் வெற்றியடைய முடியாத நிலைமை பகிஷ்கரிப்பு என்ற முடிவை உருவாக்க முடியும்.

அப்படிப்பட்ட நிலையில் தமிழ் மக்களின் வாக்குகள் தேவையாக இருந்தால் எங்களுடைய பகிஷ்கரிப்பில் மாற்றங்களை செய்வதாக இருந்தால் நாங்கள் எத்தகைய அடிப்படையில் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்பதை எங்களுடன் இணங்குகின்ற தரப்புகளுடன் தெளிவுபடுத்துவதற்கு நாங்கள் எழுத்து மூலம் குறிப்பாக தழிழ் மக்களுக்கு அடிப்படை தேவையாகவுள்ள தீர்வு பெறுப்புக்கூறல் மற்றும் அரசியல் கைதிகள் விடுவிப்பு, காணி விடுவிப்பு, ஆக்கிரமிப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தல் போன்ற விடையங்களை எழுத்துமூலமாக தயாரித்துள்ளோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் வேட்பாளர்கள் முக்கியமில்லை. இவர்கள் நம்பக்கூடியவர்கள் இல்லை. தேர்தலில் போட்டியிடுபவர்கள் என்பதால் அவர்கள் எதனையும் கூறலாம். ஆனால் வேட்பாளர்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசாவைப் பெறுத்தவரையில் இதற்குப் பின்னாலுள்ள மேற்கு, இந்திய சக்திகள் கோட்டபாய ராஜபக்சவுக்குப் பின்னால் சீனா போன்ற சர்வதேச சக்திகள் இருக்கின்றன.

ஆகவே எங்களைப் பொறுத்தவரையில் வல்லரசுகள் தான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன. எனவே தமிழ் மக்களுடைய வாக்குகள் தேவை என்று நினைக்கின்ற வல்லரசுகள் தான் நாங்கள் முன்வைக்கின்ற நிபந்தனையில் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் இத்தகைய செயற்பாடு இல்லாமல் எங்கள் அமைப்பு சார்ந்து எங்கள் மக்களை ஏமாற்ற மாட்டோம்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியை விரும்புகின்றவர்கள் கோட்டபாய ராஜபக்சவின் பின்னாலுள்ள சீனாத் தரப்புக்களை தோற்கடிக்க விரும்புகின்ற தரப்புகளோ நாங்கள் பகிஷ்கரிப்பு என அறிவித்தால் கோட்டபாய ராஜபக்சவை வெல்லவைப்பது தான் நோக்கம் என்ற கருத்துருவாக்கம் செய்ய முற்படுகின்றார்கள்.

போரை நடத்தி தமிழ் மக்களை அழித்த கோட்டபாய ராஜபக்சவிற்கு நாங்கள் ஆதரவு என்று கடந்த 10 வருடமாக சொல்லிவந்த பொய்ப்பிரச்சாரத்தை கூறுவதற்கு முற்படுகின்றார்கள். எங்களுடை மக்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இரு வேட்பாளர்கள் மத்தியில் வேறுபாடு இருக்காது.

தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றபோது போர் நிறுத்த உடன்பாடு கைக்சாத்திட்ட வேளை இலங்கையில் முப்படைகள் மூன்று மடங்கு பலப்படுத்தப்பட்டிருந்தன. இந்தப் பலப்படுத்தல் மேற்கிந்திய நாடுகளினால் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் இது நடந்தது.

ஆக ஒரு புறம் போர்நிறுத்த உடன்படிக்கை மறுபுறம் முப்படையினரின் பலப்படுத்தல் என அவர்கள் தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர். இதேகட்சிதான் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவைப் பிரித்தது. போரை வெற்றிகரமாக கொண்டு சென்றதும் இந்தத்தரப்பே இது அனைவருக்கும் தெரிந்த விடையம்.

போர் முடிந்த பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் சரத்பென்சேகா போட்டியிட்டார்கள் அன்று சரத்பென்சேகாவுக்கு ஆதரவளித்தவர்கள் இன்று கோட்டபாயவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறுகின்றார்கள். எங்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறுகின்றவர்கள் கோட்டபாயவுக்குக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதை எங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். இதனைத் தெளிவுபடுத்தாது குற்றம் சாட்டுவது மக்களை தவறாக வழிநடாத்தி திசை திருப்புவதற்காக கூறுகின்ற போலிக் குற்றச்சாட்டாகவே இதை நாம் பார்க்கின்றோம் என்றார்.

இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் .ஒன்றிணைந்து ஒரு இணக்கப்பாட்டிற்காக செயற்படுவது தொடர்பில் உங்கள் கட்சியும்உள்ளடங்கியுள்ளமை தொடர்பில் கேட்டபோது..

இந்தப் பேச்சுக்களின் ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற முடிவுதான் பெரும்பான்மையானர்வகளால் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது. எனினும் எத்தகைய இணக்கப்பாடு தேவை என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் எழுத்து மூலமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்த நிலையில் எமது யோசனைகள் அடங்கிய விபரங்களை நாங்கள் கொடுத்துள்ளோம்.

ஏனையவர்கள் கொடுத்த விடையங்கள் எமக்குத் தரப்படவில்லை. அவ்வாறு வழங்கப்படக்கூடாது என்ற கருத்துக்களே முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த ஒழிவு மறைவு ஏனென்றே தெரியாதுள்ளது. ஆகவே பொதுவாகப் பேசுகின்ற விடயங்கள் பொதுவாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இதில் ஒளிவு மறைவுகளுக்கு இடமிருக்க முடியாது. யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது. அதே நேரம் யாரும் இதிலிருந்து தப்பிக்கவும் முடியாது. ஆனாலும் தொடர்ந்து சந்திப்புக்கள் நடைபெற உள்ளமையினால் இது தொடர்பில் அதிகம் கூறுவது நாகரிகம் இல்லை என்றார்.

Exit mobile version