அரசுக்கு எதிரானவர்களை நசுக்கும் கருவி பயங்கரவாத தடைச் சட்டமாகும் – கலாநிதி இரா.ரமேஷ்

சர்வதேச சட்டங்களுக்கு முரணான ஏற்பாடுகளைக் கொண்டதாக இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் காணப்படுகின்றது.அரசுக்கு எதிரான செயற்பாட்டாளர்களை நசுக்குவதற்கு ஒரு கருவியாக இச்சட்டம்1979 இல் இருந்து பயன்படுத்தப்பட்டுவரும் நிலையில் இச்சட்டம் உடனடியாக இலங்கையின் வரலாற்றில் இருந்து அகற்றப்படுதல் வேண்டும் என்று பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஷ் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கைக்கு ஒரு சாபக்கேடாக உள்ளது.இதனால் ஏற்படும் பாதக விளைவுகள் அதிகமாகும்.இந்த சட்டமானது பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகின்றது.சிவிலியன்களை கைது செய்தல், தடுத்து வைத்து விசாரணை செய்தல், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தல் என்று எல்லையற்ற அதிகாரங்களுள்ளன.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு இச்சட்டம் இடமளிக்கிறது.இது ஒரு மோசமான மனித உரிமை மீறலாகும் என்பதோடு சர்வதேச சட்டங்களுக்கும் முரணானதாகும். இதேவைளை சாதாரணமாக கைது செய்யப்படும் ஒருவரை 24 மணித்தியாலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.இன்று தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தடைச் சட்டம் காணப்படுகின்றது.ஆனால் ஏனைய நாடுகளில் உள்ளதைக் காட்டிலும் மோசமான நிலையில் இலங்கையில் இது கையாளப்படுகின்றது.

இச்சட்டத்தினால் சிறுபான்மை மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.யுத்தகாலத்திலும் சரி அதன் பின்னரும் சரி நாட்டில் வாழுகின்ற தமிழ் இளைஞர்கள் இச்சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டமை தெரிந்ததேயாகும்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சிலர் உயிரிழந்த சம்பவங்களும் இல்லாமலில்லை.நீண்ட காலமாக சிறுபான்மையினரை அடக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட இச்சட்டம் இப்போது சமூக செயற்பாட்டாளர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுவது கவலைக்குரியதாகும்.அரசாங்கம் இச்சட்டத்தினை பயன்படுத்தும் விதம் ஜனநாயக விழுமியங்களை மழுங்கடிப்பதாகவுள்ளது.

இந்த சட்டத்தை திருத்துவதற்கு நல்லாட்சி காலத்திலும் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.எனினும் சாத்தியமாகவில்லை.இந்நிலை தொடருமானால் நாட்டிற்கு அது மிகப்பெரும் அச்சுறுத்தலாகும்.பயங்கரவாத தடைச் சட்டம் அரச பயங்கரவாதத்திற்கு வலுசேர்க்கின்றது.காலம்காலமாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் இச்சட்டத்தைக் கையிலெடுத்து மக்களை நசுக்குவதற்கு முயன்றுள்ளன என்பது கசப்பான உண்மையாகும்.இதனால் அமைதிவழிப் போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டதோடு நாட்டின் பிரஜைகளால் தமது கருத்துக்களை சுதந்திரமாக முன்வைக்க முடியாதுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் அடிப்படை மனித சுதந்திரத்தை இச்சட்டம் மறுதலிக்கின்றது.ஆர்ப்பாட்டம் செய்தால் தண்டனைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதனை அரசாங்கம் அண்மைக்கால கைதுகளின் மூலமாக உணர்த்துகின்றது.மக்கள் கிளர்ச்சியை அரசாங்கத்தினால் ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாது.

அதற்கு கடந்த கால சம்பவங்கள் உதாரணமாகும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தி அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க முனையுமானால் சர்வதேசத்தின் எதிர்ப்பையும் இலங்கை சந்திக்க வேண்டியேற்படும்.சர்வதேச உதவிகள் தேவையான ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.இந்நிலையில் உதவிகள் மற்றும் வரிச்சலுகைகள் நிறுத்தப்படுவதற்கு இது ஏதுவாகலாம்.சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களிலும் இதனால் தாக்கம் ஏற்படலாம்.

அமெரிக்கா, கனடா, உலக வங்கி உள்ளிட்ட பலவும் இலங்கையில் ஸ்திரமான ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.அவசரகால மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.அவர்களின் கருத்துக்களை அரசாங்கம் புறந்தள்ளுமானால் இன்னும் மோசமான பொருளாதார பின்னடைவு இலங்கைக்கு ஏற்படும்.

நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும்.இதற்கு இடையூறாக இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை வேரறுக்க வேண்டும்.மனித உரிமை கண்காணிப்பகம் இச்சட்டத்தை நீக்குமாறு தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும் என்றார்.