Tamil News
Home செய்திகள் “அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுவது கொரோனாவை விட ஆபத்தானது”

“அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுவது கொரோனாவை விட ஆபத்தானது”

இலங்கை அரசின் ஊடக இணை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பிலவும் அவர் தோழர்களும் ” நாட்டில் அரசியல் கைதிகளோ, தமிழ் கைதிகளோ இல்லை” எனக் கூறுவது கொரோனாவைவிட ஆபத்தானது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“பேரினவாதத்தின் சிறை கைதிகளாக இருக்கும் அரசின் ஊடக இணை பேச்சாளர் கம்மன்பிலவும் அவர் தோழர்களும் ” நாட்டில் அரசியல் கைதிகளோ, தமிழ் கைதிகளோ இல்லை” எனக் கூறுகின்றனர்.

இது கொரோனாவை விடப் பயங்கரமானது.  அத்தோடு தமிழர்களையும் அரசியல் கைதிகளையும் புண்படுத்தும் கூற்றுமாகும். இதனை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்க்கான தேசிய அமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

அரசியல் கைதிகள் உள்ளனர் என ஏற்றுக் கொண்டால் நாட்டில் அரசியல் பிரச்சனைகள்  உள்ளன என்றாகிவிடும்.  இப் பிரச்சினைய தீர்க்க வேண்டிய கடப்பாடும் ஆட்சியாளர்களுக்கு  உள்ளது  என்ற இந்த உண்மை நிலையை மறைக்க இவ்வாறு கூறுகின்றனர்.  அத்தோடு நாட்டில் அரசியல் பிரச்சனை இல்லை, இருப்பது அபிவிருத்தி பிரச்சினையும், பொருளாதார பிரச்சினையும் என்றே தேர்தல் காலங்களில் கூறினர்.

அதனைகாக்கவுமே தொடர்ந்து அரசியல் கைதிகள் என எவரும் இல்லை எனக் கூறுகின்றனர். மேலும் அரசியல் கைதிகளுக்கு பிணை அல்லது விடுதலை செய்ய வேண்டு மெனில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் அல்லது அதனை நீக்க வேண்டும்.

இதனை செய்வதற்கு ஆட்சியாளர்கள் முன்வரப் போவதில்லை. ஏனெனில் பயங்கரவாத தடைச் சட்டமே எதிர்காலத்திலும் வட கிழக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டிருக்கும் இனவாத, மத வாத செயற்பாடுகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் பயங்கர வாத சிந்தனையும் காரணமாகும்.

பயங்கர வாத தடைச் சட்டம் எதிர்காலத்தில் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும். அதுவே உண்மை. ரதுபஸ்வலை சம்பவமும் மகர சம்பவமுமே நல்ல உதாரணமாகும்.

தற்போது அரசியல் கைதிகள் விடயத்தில் அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேரவேண்டிய காலத்தின் கட்டாயம் தோன்றியுள்ளது. தமது சுய அரசியலுக்கு அப்பால் நின்று நீண்ட கால பிரச்சினையாக உள்ள அரசியல் கைதிகள் விடயத்தைக் கையாண்டு அரசியல் கைதிகளை வகைபடுத்தாது விடுதலையை பெற்றுக் கொடுக்க செயற்படுவதே அவர்களுக்கான கௌரவமாக அமைவதோடு தமிழர்களின் அரசியலுக்கான அங்கீகாரமாகவும் அமையும்.

Exit mobile version