அரசின் பொறுப்பதற்ற செயலால் வடக்கில் தொற்றும், உயிரிழப்பும் அதிகரிப்பு – கஜேந்திரன்

ராஜபக்ஷ அரசின் பொறுப்பற்ற செயல்களால் வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் வேகமும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அவர், ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனாத் தடுப்பூசி வழங்கும்செயற்பாடு அரசியல் மயப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. வடக்கு மாகாணத்துக்கு ஏற்கனவே கொரோனாத் தடுப்பூசிகளை ராஜபக்ஷ அரசு வழங்கியிருந்தால் இந்தளவு பாரதூரமான விளைவுகளை எமது மாகாணம் சந்தித்திருக்காது. அரசின் பொறுப்பற்ற செயல்களால் தொற்றின் வேகமும் உயிரிழப்பின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்துள்ளது.

யானைப் பசிக்கு சோளப்பொரி போல் சிறிய அளவிலான கொரோனாத் தடுப்பு மருந்துகளை யாழ்.குடா நாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டு பெருமளவான ஆட்களைத் திரட்டிக் கொரோனாவைப் பரப்பும் வகையில் அரசின் செயற்பாடு காணப்படுகின்றது. மக்கள் நலன் சார்ந்த செயற்பாடாக அது அமையவில்லை. அரசியல் இலாபம் தேடும் முயற்சியையே அங்கஜன் இராமநாதனும் டக்ளஸ் தேவானந்தாவும் நாமல் ராஜபக்ஷவும் சேர்ந்து செய்துள்ளனர்.

கொரோனாத் தடுப்பூசிகளைச் சுகாதாரப் பிரிவிடம் கையளித்திருந்தால் அவர்கள் அதனைச் சிறப்பாக மக்களுக்கு வழங்கியிருப்பார்கள். நிலைமைகள் மோசமாகச் செல்லும்போது அதற்குள் அரசியல் இலாபம் தேடும் முயற்சியே நடைபெறுகின்றது.

தனிமபப்படுத்தல் மையத்தில் உள்ள பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அதனை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். தேசிய கல்வியல் கல்லூரி மாணவர்களின் சொத்து. நெருக்கடியான நிலையில் மக்களுடைய நலனுக்காக கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டு இருந்தாலும் கூட அதனைப் பொறுப்பாகக் கையாள வேண்டியது முக்கியமாகும். இதனை வைத்தியசாலை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்” என்றார்.