அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாம் ஆதரிக்க போவதில்லை..!

சுதந்திர தின கொண்டாட்டத்தில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாமை காரணமாக குறித்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் பங்குபற்றவில்லை எனின், வடக்கு பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படாமை தொடர்பில் அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இலங்கைத் தமிழர்களையும் தமிழ் மொழியையும் புறக்கணிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை தாம் ஆதரிக்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த போதிலும் தாம் கலந்து கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களிக்க தவறிய தமிழ் மக்களை பழிவாங்கும் நோக்கிலேயே ஜனாதிபதி செயற்படுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் நேற்று(05.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திஸாநாயக்க இதனை குறிப்பிட்டார்.

பல மொழிகளில் தேசிய கீதம் சில நாடுகளில் மாத்திரமே பாடப்படுகின்றன.

நாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டுள்ளன.

தெற்கிலுள்ள சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகின்றது.

எனினும் வடக்கிலுள்ள பாடசாலைகளில் சிங்கள மொழி கற்பிக்கப்படுவதில்லை.

சிறந்த ஒரு தொடர்பை ஏற்படுத்தி கொள்வதற்கே மொழி அவசியமாகின்றது.

எவ்வாறாயினும் இரா.சம்பந்தன் இன ரீதியாகவே மொழி குறித்து பேசுவதாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வீரக்குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.