அம்பாந்தோட்டை விவகாரம்: கோட்டாபயவின் அறிவிப்பை வரவேற்கும் சீனா

அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் சீனக் கம்பனியுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீளாய்வு செய்யப் போவதில்லை என்று சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ கூறியதைச் சீனா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக சீனத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“சிறலங்காவின் சுயாதிபத்தியத்தையும், ஆள்புல ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா மீண்டுமொரு தடவை வலியுறுத்துகிறது. அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் சிறிலங்கா அரசினதும் அதன் கடற்படையினதும் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

சிறிலங்காவின் வேறு துறைமுகங்களின் பாதுகாப்பும், கட்டுப்பாடும் தொடர்பில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளிலிருந்து வேறுபட்டதாக அம்பாந்தோட்டைத் துறைமுகம் இருக்கப் போவதில்லை. கொழும்பிலுள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களைக் கடந்த 19 ஆம் திகதி சந்தித்த ராஜபக்ஷ அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பில் தற்போது நடைமுறையிலிருக்கும் உடன்படிக்கையை சிறிலங்கா அரசு மீள்பேச்சுக்கு உட்படுத்தப்போவதில்லை என்பதையும், கைச்சாத்திடப்பட்ட வர்த்தக உடன்படிக்கை ஆட்சிமாற்றத்தின் விளைவாக மாற்றியமைக்கப்படப் போவதில்லை என்பதையும் தெளிவாகக் கூறியிருந்தார்.

ஜனாதிபதியின் கருத்துக்களைப் பெரிதும் மெச்சுகின்ற சீனா உடன்படிக்கையின் நடைமுறைப்படுத்தலைத் துரிதப்படுத்துவதற்கும், அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கும் சிறிலங்கா தரப்புடன் சேர்ந்து பணியாற்றுமாறு சம்பந்தப்பட்ட சீன நிறுவனங்களுக்கு வழிகாட்டலை வழங்கத் தயாராக இருக்கிறது” என்றுள்ளது.