அம்பாந்தோட்டையில் நிலைப்பாட்டை மாற்றிய கோட்டா: கடும் அதிருப்தியில் டில்லி

சீனாவுக்கு 99 வருட குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும்,சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ அறிவித்திருப்பது இந்தியத் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பின்போதே ஜனாதிபதி கோட்டாபய, அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்கப் போவதில்லை என்ற தகவலை வெளியிட்டார். அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான 99 ஆண்டு குத்தகை உடன்பாட்டை மாற்ற விரும்புகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“அதை மாற்ற முயற்சிக்கவில்லை, ஏனெனில் இது முன்னைய அரசு செய்து கொண்ட வணிக உடன்பாடு. முன்னைய அரசு இந்த உடன்பாடு குறித்து பேச்சு நடத்தியபோது, பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது மீள் பேச்சு அல்ல, இது ஒரு வணிக உடன்பாடு என்பதால், அதன் வணிக அம்சங்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து நான் கவலைப்படுகிறேன், அது குறித்தே நாங்கள் அவர்களுடன் பேசவுள்ளோம். துறைமுகத்தின் கட்டுப்பாட்டுப் பொறிமுறை குறித்து ஆராய்கிறோம். ஏனைய துறைமுகங்களைப் போலவே, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கட்டுப்பாட்டையும் அரசே வைத்திருக்கவேண்டும். குறிப்பாக எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு, ஆகிய விடயங்கள், அரசிடம் இருக்கவேண்டும்.

கொழும்பு துறைமுகத்தைப் போல, எந்தக் கப்பல்கள் வரும் அல்லது செல்லவேண்டும் என்பதை அரசே தீர்மானிக்க வேண்டும். அந்த அதிகாரம் எங்களிடம் இருக்க வேண்டும். சீனப் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதித்தேன். துறைமுகத்தின் பாதுகாப்பு, அரசிடம் வழங்கப்படவேண்டும் என்பதற்கு அவர்கள் உடன்பட்டுள்ளனர்.

கொழும்புத் துறைமுகத்திற்கு ஒரு கப்பல் வரும் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன. இதே நடைமுறை, காங்கேசன்துறை, திருகோணமலை அல்லது அம்பாந்தோட்டையிலும் பின்பற்றப்படவேண்டும். நான் பதவியேற்ற பின்னர், என்னைச் சந்தித்த சீன சிறப்பு பிரதிநிதியுடன் இந்த விடயம் பற்றி கலந்துரையாடினேன்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் துறைமுகக் கட்டுப்பாடு தொடர்பான விடயங்களில் திருத்தம் செய்வதற்கு அவர் இணங்கினார். ஓர் அரசுடன் கையயழுத்திடப்பட்ட வணிக உடன்பாடுகள், அடுத்த அரசால் மதிக்கப்படுவதில்லை, அதனை மாற்றி விடும் என்ற எண்ணத்தை முதலீட்டாளர்களிடம் ஏற்படுவதுவதற்கு நான் விரும்பவில்லை. அது பிரச்சினையல்ல.

துறைமுகத்தை ஒரு முக்கிய மூலோபாயப் பொருளாதார மையமாகும். இது ஓர் இறையாண்மை கொண்டஅரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டிய ஒரு சொத்து. உலகளாவிய அதிகாரப் போட்டிகளின் ஒரு பகுதியாக மாற நாங்கள் விரும்பவில்லை. உடன்பாடுகளை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளோம். அதன் கண்டறிவுகளின் அடிப்படையில், துறைமுகத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு பொறிமுறையை மறுசீரமைக்க முயலக்கூடும்” என்று தெரிவித்தார்.

புதுடில்லிக்கான விஜயத்தை கடந்த மாதம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய, அதற்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்களித்த நேர்காணலில் அம்மாந்தோட்டை உடன்படிக்கையை தான் மாற்றியமைக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது அந்த நிலைப்பாட்டை அவர் மாற்றிக்கொண்டிருப்பது இந்தியத் தரப்புக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.