அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை பதவி நீக்கினார் ட்ரம்ப்

அமெரிக்கப் பாதுகாப்புத்துறை அமைச்சரான மார்க் எஸ்பர் என்பவரை அதிபர் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

இவருக்குப் பதிலாக தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் கிறிஸ்தோபர் மில்லரை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.

இது தொடர்பாக ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவில், மார்க் எஸ்பர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். தேசிய தீவிரவாத எதிர்ப்பு மையத்தின் உயர் மதிப்பு மிக்க இயக்குநர் கிறிஸ்தோபர் மில்லர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுகிறார். அவர் பாதுகாபபுத் துறையின் பொறுப்பு அமைச்சராக உடனடியாக பதவி ஏற்கிறார. எஸ்பரின் பணிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.

தனது பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரியுடன் முடியடைய உள்ள நிலையில், ட்ரம்ப் பல அதிரடியான முடிவுகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவிற்கு எதிராகவும், ஈரானுக்கு எதிராகவும் பல முக்கிய முடிவுகளில் கையெழுத்திடவும் வாய்ப்பு உள்ளது.

புதிய ஜனாதிபதியாக ஜோ பிடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். கடந்த ஒக்டோபர் மாத இறுதியில் 2 பிளஸ் 2 ஆலோசனைக்காக எஸ்பர் இந்தியா சென்றிருந்தார். அவருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவும் சென்றிருந்தார். இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிசங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.