அமெரிக்க – சீன மோதலில் இடையில் நுழையும் இந்தியா

அமெரிக்கா – சீனா இடையே நிகழ்ந்து வரும் வர்த்தகப் போரைப் பயன்படுத்தி, சீனாவில் இயங்கிவரும் பல நிறுவனங்களை இந்தியாவிற்கு இடம்பெயரச் செய்யும் வகையிலான நகர்வுகள், மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா தரப்பில் குறிவைக்கப்படும் நிறுவனங்களுள் அப்பிள், ஃபொக்ஸ்கான், விஸ்ரான் கார்ப் போன்ற நிறுவனங்கள் முக்கியமானவை என்றும் கூறப்படுகின்றது.

ஓகஸ்ட் 14ஆம் திகதி சந்திப்பு நிகழ்த்திய இந்திய அதிகாரிகள், குறிவைக்கப்படும் நிறுவனங்கள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்கள். அந்தக் கலந்துரையாடல் தாய்வான் நாட்டை தலைமையகமாகக் கொண்ட பீகட்ரான் கோப்பிறேஸன் என்ற நிறுவனத்தையும் உள்ளடக்கியிருந்தது.

சீனா மற்றும் அமெரிக்கா என்ற உலகின் இரண்டு பெரிய பொருளாதார சக்தி கொண்ட நாடுகள், தமக்குள் வணிக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. பரஸ்பரம் இறக்குமதி செய்து கொள்ளும் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பை மேற்கொள்கின்றன.

எனவே இந்த பாதிப்பில் சிக்கிக் கொண்டு, அதிலிருந்து மீள விரும்பும் நிறுவனங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து இயங்கச் செய்யும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.