Tamil News
Home செய்திகள் அமெரிக்க, இந்தியத் தூதரகங்களே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கின்றன ; அநுரகுமார திஸாநாயக்க

அமெரிக்க, இந்தியத் தூதரகங்களே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கின்றன ; அநுரகுமார திஸாநாயக்க

இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் விருப்பத்துக்கு ஏற்பவே நாட்டின் தலைவர்களும் அரசுகளும் உருவாக்கப்படுகின்றன என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தெஹிவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மக்கள் தேர்தலில் வாக்களித்தாலும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகமும் அமெரிக்கத் தூதரகமும் எடுக்கும் முடிவுகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலின்போது எம்.சி.சி. உடன்படிக்கையை இடைநிறுத்துவதற்காக கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷவைத் தெரிவு செய்த பின்னர் மக்கள் அவர் எம்.சி.சி. உடன்படிக்கையை இரத்துச் செய்வார் என எதிர்பார்த்த போதிலும் இன்னமும் எம்.சி.சி. விவகாரம் குறித்த பேச்சுகள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உடன்படிக்கை குறித்து ஜனாதிபதியும் அமெரிக்கத் தூதரகமும் ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கத் தூதரகம் தற்போது உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்கு அரசுக்கு ஓகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. மக்கள் அரசுகளை உருவாக்குகின்றார்கள் என்றால் மக்களின் தேவைகளை அந்த அரசுகள் நிறைவேற்ற வேண்டும். எனினும் நாடு வெளிநாட்டு இராஜதந்திரிகள், தூதரகங்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆட்சி செய்யப்படுகின்றது”என்றார்.

Exit mobile version