அமெரிக்க அதிபரின் மத்திய கிழக்கிற்கான அமைதித்திட்டம் – இஸ்ரேலின் இறையான்மைக்குள் சென்றது பலஸ்தீனம்

கடந்த செவ்வாய்க்கிழமை (28) அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்ப் மத்திய கிழக்குக்கான அமைத்தித் திட்டத்தை அறிவித்தார். அவர் அறிவித்த திட்டம் அவர் கையில் இருந்த காகிதத்தை விட பெறுமதியற்றது.

தனது கையில் இருந்த காகிதத்தில் காணப்பட்ட எழுத்துப் பிழைகளையும் ரம்ப் கவனிக்கவில்லை என்பது அவருக்கு மத்திய கிழக்கு தொடர்பில் எந்த அறிவும் இல்லை என்பதைக் காட்டுகின்றது என தெரிவிககின்றனர் ஆய்வாளர்கள். இந்த அறிவிப்பின் பிரதான நோக்கம் ரம்ப் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியுள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஆகியவர்களின் அரசியல் பலத்தை அதிகரிப்பதே ஆகும்.

எதுவுமற்ற இந்த அமைதித் திட்டத்தின் பிரதான நோக்கம் மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளை சட்டபூர்வமாக இஸ்ரேலுக்கு மாற்றுவதே. இது ஒரு இறந்த திட்டம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

5 மில்லியன் பலஸ்தீன அகதிகளுக்கு ஐ.நா ஊடாக வழங்கப்படும் 360 மில்லியன் நிதியையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டத்திற்கு எந்த ஒரு பலஸ்தீன மக்களும் ஆதரவு தரவில்லை என்பதுடன், மேற்குலக ஆதரவு அரபு நாடுகள் அமைதித் திட்டத்தை வரவேற்றபோதிலும் திட்டத்தின் நோக்கத்தை ஆதரிக்கவில்லை. துருக்கியும், ஈரானும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

பலஸ்தீன பிரதமர் மகமூட் அப்பாஸ் இந்த திட்டத்தை எதிர்த்ததுடன், ஜெருசலத்தையோ எமது உரிமைகளையோ யாரும் விற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அதாவது பலஸ்தீன மக்களிடம் எஞ்சியுள்ள நிலத்தையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்க முற்பட்டுள்ளது. 1917 ஆம் ஆண்டு பிரித்தானியா மேற்கொண்டது போன்ற ஒரு செயல் இது. 1947 ஆம் ஆண்டு பாரபட்சமாக நடந்துகொண்ட ஐ.நா 30 விகித மக்கள் தொகையை கொண்ட இஸ்ரேலுக்கு 55 விகித நிலத்தையும் 67 சத விகிதம் கொண்ட பலஸ்தீன மக்களுக்கு 45 விகித நிலத்தையும் வழங்கியிருந்தது.

Palestine அமெரிக்க அதிபரின் மத்திய கிழக்கிற்கான அமைதித்திட்டம் - இஸ்ரேலின் இறையான்மைக்குள் சென்றது பலஸ்தீனம்ஆனால் தற்போதைய அமெரிக்காவின் திட்டம் 15 விகித நிலத்தையே பலஸ்தீன மக்களுக்கு வழங்கியுள்ளதுடன், 85 விகித பலஸ்தீனப் பிரதேசம் இஸ்ரேலின் இறையான்மையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜெருசலம் இஸ்ரேலின் பிரிக்க முடியாத தலைநகரம் என்று 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா அங்கீகரித்திருந்தது.

அமெரிக்காவின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பலஸ்தீன பிரதமருக்கு அழுத்தம் கொடுத்துவரும் சவுதி அரேபியா, ஜெருசலமுக்கு பதிலாக அபு டிஸ் என்னும் அருகில் உள்ள நகரத்தை தலைநகராக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுள்ளது.

அமெரிக்காவின் திட்டம் என்பது அனைத்துலக விதிகள் ஐ.நா தீர்மானங்கள், நீதிமன்ற உத்தரவுகள் எல்லாவற்றையும் புறம்தள்ளியுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். பலஸ்தீனத்தின் நண்பன் என்று கூறும் சிறீலங்கா அமெரிக்காவின் திட்டத்தை ஆதரரிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.