Home ஆய்வுகள் அன்னையின் உயிர்க்கொடை வேண்டி நிற்பதென்ன-அருண்மொழி.

அன்னையின் உயிர்க்கொடை வேண்டி நிற்பதென்ன-அருண்மொழி.

அன்னை பூபதி ஈழத்தமிழ் மக்களின் அரசியல் விடுதலை வடிவம். தென் தமிழீழத்தில் இருந்து வெளிப்பட்ட மக்கள் போராட்டத்தின் அதியுத்தம வரலாறு. இந்திய அரசிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் பட்டினிப் போராயுதம் ஏந்திய போராளி அவர்.ஈழத்தமிழ் மக்களின் பெரும் அரசியல் விடுதலை ஆயுதமாக அவர் வெளிப்பட்டார்.

மகாத்மா காந்தி சாத்வீகப் போரால் வென்றெடுத்ததாக வரலாறு கூறும் இந்திய தேசம் ‘அமைதிப் படைகளாக’ தனது படைகளை இலங்கைக்கு அனுப்பியது. தமக்கு அரசியல் சுதந்திரம் பெற்றுத்தரும் என்று நம்பி மக்கள் ஆரவாரித்து வரவேற்றனர். திணிக்கப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் தனது முக்கிய சரத்துக்களைக் ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது என்பதைப் புரிந்துகொள்ளாமல் மக்கள் மகிழ்து களித்தனர்.

தமிழரின் அரசியல் விடுதலைப் போராட்ட ஆயுதங்களை கையளிக்க வைப்பதில் இந்தியா காட்டிய கவனத்தை தமிழரின் இறைமைசார் காப்புக்களை நடைமுறைப்படுத்துவதில் காட்ட மறுத்தது.

இந்தியாவின் இந்த ஏமாற்று அரசியலை வெளிப்படுத்த தியாகி திலீபன் நீரையும் உணவையும் மறுத்து அகிம்சைப் போர் தொடுத்தார்.அதன் வழியில் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் திலீபன் மக்கள் முன்பாகவே தியாக மரணமடைந்தார்.

அதன் பின் விடுதலைப்புலிகளின் தளபதி போராளிகள் 13 பேர் யுத்த நிறுத்த விதிகளை மீறி இலங்கைப் படைகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நஞ்சருந்தி வீரச்சாவடைந்தனர்.93881370 3219584961399159 8007972948663074816 o அன்னையின் உயிர்க்கொடை வேண்டி நிற்பதென்ன-அருண்மொழி.

இந்த நிலையில் இந்திய படைகள் விடுதலைப்புலிகளின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.சண்டைகளில் ஏற்பட்ட தோல்விகளின் போதெல்லாம் அப்பாவி தமிழ் மக்களை பழிதீர்த்தது பாரத படுகொலைபடை. சித்திரவதைகள்,கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் என உலகின் மிகக்கொடுமையான படையாக இந்தியப்படை தன்னை இனங்காட்டி நின்றது.

இந்த கொடுமையான நிலைமைகளைக் கண்ட அன்னையர் முன்னணியினர் உடனடியாக போர் நிறுத்தத்தை நடைமுறைப்டுத்த வேண்டும், விடுதலைப் புலிகளுடன் புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காணவேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர்.

அன்னை பூபதி உண்ணா நோன்பில் தன்னை ஈடுபடுத்தினார்.எத்தனை வேண்டுகோள்கள், அச்சுறுத்தல்கள் ,குடும்பத்தையே கொலைசெய்வோம் என்ற மிரட்டல்கள் வந்தபோதும் அந்த அன்னை சிறிதும் கலங்காமல் துணிந்து நின்றாள்.

அமைதிவழியில் நின்று போராடிய அந்த தாய் சாவை நோக்கி சென்றுகொண்டிருந்தாள்.இந்திய அரசு இதனை கண்டுகொள்ளவுமில்லை பொருட்படுத்தவுமில்லை. இந்திய வல்லாதிக்கம் அமைதி போராட்டங்களை ஒரு பொருட்டாக மதிக்காது என்பது மீண்டுமொருமுறை நிரூபணமானது.அன்னை தியாகத் தீயில் உருகி அணைத்தாள்.

அன்று இந்திய வல்லாதிக்கத்தை, அதன் எடுபிடிகளை எதிர்த்துநின்ற எமது அன்னையர்களின் தற்றுணிவு,தற்கொடை உணர்வு என்பன ஈழவிடுதலைப் போராட்டத்தில் மக்கள் எழுற்சியின் ஒரு உயரிய வடிவம். அந்த அன்னையரை, அவர்களுக்கு துணைநின்ற மக்களை அவர்களின் செயற்பாடுகளை இன்று மீட்டுப் பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அடக்குமுறைகளுக்கு எதிராக,அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடவேண்டிய எம்மினம் இன்று  சிதறி சினானபின்னமாகிக் கிடக்கிறது.சுயநல அரசியல்,துரோகத்தனங்கள்,நானே பெரிதென்ற ஆணவம்,பரஸ்பர புரிந்துணர்வின்மை,காழ்ப்புணர்வு என்பவற்றால் கட்டுண்டு கிடக்கிறது எம்மினம்.

புரியப்பட்ட தியாகங்களையும்,கொடுக்கப்பட்ட உயிர் விலையையும் மறந்துவிட்டு மற்றோரு உலகில் நாம் வாழ்கின்றோம்.கருத்து வேற்றுமைகள் இருந்தாலும், ஒரு பொதுவான புள்ளியில் ஒற்றுமையுணர்வுடன் செயற்படக்கூடிய அளவுக்குக்கூட எம்மவர்களின் உணர்வுகள் இன்னும் உருப்பெறுவதாக இல்லை.

அன்னை பூபதி உள்ளிட்ட இந்த தேசத்துக்காக உயிர்தந்த உத்தமர்களுக்கு நாம் செய்யக்கூடிய மெய்யான கைம்மாறு, ஒன்றுபட்ட ஓரினமாய் உயர்ந்து நிற்பதே.

Exit mobile version