Tamil News
Home செய்திகள் அனைத்துலக விதிகளை சிறீலங்கா அரசு மதிக்கவேண்டும் – இங்கிலாந்து மனித உரிமைகள் அமைப்பு

அனைத்துலக விதிகளை சிறீலங்கா அரசு மதிக்கவேண்டும் – இங்கிலாந்து மனித உரிமைகள் அமைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி கைது செய்து தடுத்துவைத்துள்ள மனித உரிமைகள் தொடர்பான வழக்கறிஞர் கெஜாஸ் ஹிஸ்புல்லாவை சிறீலங்கா அரசு விடுதலை செய்யவேண்டும் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை (6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சட்டவிதிகளை சிறீலங்கா அரசு மதிப்பதுடன், அனைத்துலக சட்டவிதிகளையும் சிறீலங்கா அரசு பின்பற்ற வேண்டும். வழக்கறிஞர் விடுதலைசெய்யப்படுவதுடன், துன்புறுத்தல்கள், பழிவாங்கல் போன்ற செயற்பாடுகள் அற்ற நிலையில் அவர் தொடர்ந்து பணியாற்றுவதற்கான வழிகளையும் ஏற்படுத்த வேண்டும்.

முஸ்லீம் சிறுபான்மை இனத்தை சேர்ந்த இவர் சிறீலங்கா அரசுக்கு எதிராக பல வழக்குகளை பதிவுசெய்தவர். முஸ்லீம் மக்களின் உரிமைகளுக்காக செயலாற்றியவர்.  கடந்த ஏப்பிரல் 14 ஆம் நாள் கைதுசெய்யப்பட்ட அவர் மீது புனிதஞாயிறு தாக்குதலில் தொடர்புள்ளவர் என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் அவரின் கைது என்பது ஒரு எழுந்தமானமான கைது ஆகும். சிறீலங்கா அரசு அனைத்துலக மனித உரிமைகள் விதிகளின் சரத்து 3 இற்கு கட்டுப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அனைத்துலக பொது மற்றும் அரசியல் உரிகைளுக்கும் சிறீலங்கா அரசு கட்டுப்பட்டுள்ளது. இந்த விதிகள் எழுந்தமானமான கைதுகளை தடுப்பதுடன், கைது செய்யப்பட்டவர்கள் நீதியாக நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றன.

இந்த கைது என்பது சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான அரசின் திட்டமிட்ட செயற்பாடு என ஐக்கிய நாடுகள் சபையின் 6 சிறப்பு அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் தெரிவித்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version