Tamil News
Home செய்திகள் அதிக அபாயமான மாகாணமாக மேல் மாகாணம் பிரகடனம்

அதிக அபாயமான மாகாணமாக மேல் மாகாணம் பிரகடனம்

கொரோனா தொற்று அதிக அபாய மாவட்டங்களாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகியன இனங்காணப்பட்டுள்ளன. ஆகவே மறு அறிவித்தல்வரை குறித்த பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது குறிதது ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொவிட் 19 கொரோனா வைரஸ் பரவலை கவனத்திற் கொள்ளும் போது கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் மிகவும் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ளன.

இம் மூன்று மாவட்டங்களிலும் அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட வேலையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் கடைகளில் அதிகளவு ஒன்றுகூடியிருந்தமை கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பாரிய இடையூறாகும் என சுகாதார அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

எனவே எதிர் வரும் காலங்களில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யுமாறு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. சதொச, கீல்ஸ், லாப்ஸ், ஆபிகோ, புட் சிடி, அரலிய, நிபுண மற்றும் ஏனைய மொத்த விற்பனை நிலையங்கள் இப்பணிக்காக இணைத்துக்கொள்ளப்படும்.

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களை வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் செயலணி ஒன்று தாபிக்கப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் மற்றும் குறித்த வேறு அதிகாரிகள் இச்செயலணியின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர்.

இதற்குப் பின்னர் இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மீண்டும் அறிவிக்கும் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், எரிவாயு, ஏனைய சேவைகளை தடையின்றியும் தொடர்ச்சியாகவும் மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை (25) முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

லொறி, வேன், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கில் உள்ளிட்ட பொருட்களை விநியோகிப்பதற்கு பயன்படுத்திகொள்ளும் அனைத்து வழங்கள் வாகனங்களுக்கும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வீதிகளில் பயணம் செய்ய அனுமதி உள்ளது.

Exit mobile version