அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும்

இன்று எம் அனைவரின் மனங்களிலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் நினைவிருக்கின்றனவா என்பது தெரியவில்லை ஆனால்,

“ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ”

என்ற பாரதியின் பாடல் வரிகள் நிச்சயமாக நினைவில் இருக்கும். காலத்தால் மறைக்கப்பட்ட எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்று ஒரு தொலைபேசிக்குள் அடங்கி விட்டது. காலை எழுந்ததில் இருந்து இரவு தூக்கத்தை கூட மறந்து தொலைபேசி விளையாட்டுக்களில் மூழ்கிப்போகின்றனர். விடுமுறை தினங்களிலும், மாலை நேரங்களில் தெரு ஓரங்களிலும் வீட்டு முற்றங்களிலும், திண்ணைகளிலும், நண்பர் வீடுகளிலும் பெரியவர்கள் சூழ்ந்திருந்து வேடிக்கை பார்க்க குதூகலமாக விளையாடிய விளையாட்டுக்கள் இன்று வெறும் நினைவுகளாக மட்டுமே ஒவ்வொருவர் மனங்களிலும் காணப்படுகின்றது. இது மட்டுமா திருவிழாக்கள், பண்டிகைகள், திருமண நிகழ்வுகள் என்பவற்றில் பெரியவர்கள் தமது வேலைகளில் ஒரு புறம் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், இன்னொரு புறம் சிறுவர்களின் விளையாட்டு என்பதும் கோலாகலமாக இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கும்.

இன்று விளையாடிய இடங்களும் வெறிச்சோடி விட்டன. கூடி இருந்து வேடிக்கை பார்க்கவும் யாரும் இல்லை. தெரு ஓரங்களில் விளையாடிய விளையாட்டுக்கள் இன்று தொலைபேசிக்குள் திரிபடைந்துவிட்டன. விளையாட்டினை கற்றுக்கொடுக்கும் முதியவர்களும்  முதியோர் இல்லங்களிற்கு அனுப்பப்பட்டுவிடுகின்றனர். இவ்வாறான  எம் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒரு சில கிராமப்புறங்களில் காணப்பட்டாலும் நகர்ப்புறங்களில் பாடப்புத்தகங்களில் காண்பதே அரிதாக மாறிவிட்டது.

குலைகுலையாய் முந்திரிக்கா, கிச்சுக் கிச்சு தாம்பாளம், ஒரு குடம் தண்ணீர் ஊத்தி, கண்ணாமூச்சி ரே ரே, பேணிப்பந்து, கீச்சு மாச்சு தம்பலம், உப்பு மூட்டை, எறி பந்து, எலியும் பூனையும், எட்டுக்கோடு, கிளிக்கோடு, தாயம், திருடன்-பொலிஸ், கோலி, கிட்டிப்புள், பல்லாங்குழி, சடுகுடு என நீண்டு கொண்டு செல்கின்றது எமது பாரம்பரிய விளையாட்டுக்கள்.

ஆலையிலே சோலையிலே

ஆலங்காடி சந்தையிலே

கிட்டிப் புள்ளும் பம்பரமும்

கிறுகியடிக்கப் பாலாறு…….

என பாடலை பாடிக்கொண்டு விளையாடுவதே ஒரு தனி அழகு. ஆனால் இன்றைய கால சிறுவர்கள் இவற்றின் பெயரைக்கூட கேள்விப்பட்டிருப்பார்களோ என்பது கேள்விக்குறி. இவற்றுக்கெல்லாம் காரணங்கள் பல இருப்பினும் அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் ஒரு முக்கிய காரணமாக காணப்படுகின்றது. தொலைபேசிப் பாவனை பல நன்மைகளை எமக்கு வழங்குகின்ற போதும், அதன் அதிகரித்த பாவனை என்பது எமது பாரம்பரிய விளையாட்டுக்களை பாதிக்கின்றன என்பதே உண்மை.

உணவு ஊட்டுவதற்காக நிலாவினைக் காட்டி சோறு ஊட்டிய காலம் கடந்து தொலைபேசியில் Bubble shooter, Talking cat, car racing என்பவற்றை காட்டி உணவு ஊட்டுகின்றனர். வீட்டில் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்புடைய முதியவர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விட்டு இரண்டு தெருக்கள் தள்ளி இருக்கும் உறவினர்களுக்கு கூட தொலைபேசியில் உரையாடுகின்றனர் இன்றைய பெற்றோர்கள். வேலைக்குச் செல்லும் பெற்றோர்களும் வீட்டில் தொலைக்காட்சி பார்க்கும் பெற்றோர்களும் தமது பிள்ளைகளை சமாளிப்பதற்கு கையில் எடுக்கும் ஆயுதம் புத்தகங்களோ, தமது பிள்ளைகளின் அயல் வீட்டு நண்பர்களோ அல்ல. தொலைபேசிகளும் அவற்றில் இருக்கும் விளையாட்டுக்களுமே ஆகும்.

இவ்வாறு வளர்க்கப்படுகின்ற பிள்ளைகள் தமது சிறு வயது முதல் தொலைபேசிகளையே தமது உறவாக மாற்றிக்கொள்கின்றனர். பாடசாலை விடுமுறை தினங்களிலும், பண்டிகை நாட்களிலும் தமது உறவினர் வீடுகளுக்கு சென்று சக வயது நண்பர்களுடன் விளையாடுவதற்கு பதிலாக தமது பண்டிகை வாழ்த்துக்களை தொலைபேசியினூடாக அனுப்பிவிட்டு வீட்டில் இருந்து கொண்டே தொலைபேசிகளுடன் விளையாடுகின்றனர்.

எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சியையும் உரத்தையும் கொடுத்தன. நோய் நொடிகள் இன்றி ஒற்றுமையாக வாழ வழிகாட்டின. மனதில் நிம்மதி மற்றும் சந்தோசத்தை ஏற்படுத்தின. மன உளைச்சலும், மன அழுத்தமும் அவற்றில் காணப்படவில்லை. உடலையும், உள்ளத்தையும் புத்துணர்சியுடன் பாதுகாத்து வைத்திருந்தன. தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மூலம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும், கூடி வாழும் இயல்பை வளர்த்துக்கொள்ளவும், வெற்றி தோல்விகளை சமனாக நினைக்கவும், கூடி விளையாட வேண்டும் என்ற அழுத்தமான செய்திகளை நமது முன்னோர்கள் வகுத்து சென்றுள்ளனர்.

ஆனால் அதிகரித்த தொலைபேசிப் பாவனை இன்றைய சிறுவர்களின் மனதிற்குள் கூட நுழைந்து விட்டன. வீடியோ கேம், மரணத்தை ஏற்படுத்த கூடிய விளையாட்டுக்கள், விளையாட்டினால் தூண்டப்பட்டு தற்கொலை செய்துகொள்பவர்களும் உள்ளனர். பத்து வயதிலேயே தலை வலி, கண் பிரச்சினை, மன அழுத்தம், தூக்கமின்மை என்பவற்றை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

பெற்றவர்களிடம் திட்டு வாங்கி, அடி வாங்கி தனது நண்பர்களுடன் விளையாட சென்ற காலம் கடந்து பத்து வயதினிலேயே தனக்கு தொலைபேசி வேண்டும் என்று தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர் இன்றைய கால சிறுவர்கள். இன்று எத்தனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை மண்ணில் விளையாட விடுகின்றனர், எத்தனை பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தெரு ஓரங்களில் விளையாட விட்டு அழகு பார்க்கின்றனர். இன்று வீடியோ கேம் விளையாடுவதை கௌரவமாக பார்க்கும் பெற்றோர்களுக்கு தெரியவில்லை அது எவ்வளவிற்கு ஆபத்தானது என்று.

 மாற்றம் பெற்று வருகின்ற தொழினுட்ப விருத்திக்கு ஏற்ப அழிவடைந்து கொண்டு செல்வது எமது பாரம்பரிய விளையாட்டுக்களும் தான்  எனவே எமது பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு. பொழுபோக்கிற்காக தொலைபேசிகளை வழங்குவதற்கு பதிலாக ஒவ்வொரு பெற்றோர்களும் தமது சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்களை தமது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுத்தாலே போதுமானது. அது முடியவில்லை எனில் எமது வீட்டில் இருக்கும் முதியவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்காமல் இருந்தாலே ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் எமது பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்க நாம் எடுக்கும் சிறு முயற்சியாக அமையும்.

வேலம்புராசன் .விதுஜா

சமூகவியல் துறை

யாழ். பல்கலைக்கழகம்