Tamil News
Home செய்திகள் அசாத் சாலி கைது – பொலிஸ்மா அதிபருக்கு சிறீலங்கா முஸ்லீம் கவுன்சில் கடிதம்

அசாத் சாலி கைது – பொலிஸ்மா அதிபருக்கு சிறீலங்கா முஸ்லீம் கவுன்சில் கடிதம்

முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை  கவலை அளிப்பதாக   சிறீலங்கா முஸ்லீம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லீம்  கவுன்சில் அனுப்பியுள்ளது.

அதில், “இலங்கையின் முஸ்லீம் சமூகத்தில் காணப்படும் ஒரு சில தீவிரவாதிகள் உட்பட அனைத்து வகையான தீவிரவாதம் பயங்கரவாதம் ஆகியவற்றிற்கு எதிராகவும் அசாத் சாலி குரல்கொடுத்தவர்.

முஸ்லீம் இளைஞர்கள் தீவிரவாதமயப்படுத்தப்படுவது குறித்து நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு சில முஸ்லீம் தலைவர்களில் அவரும் ஒருவர்.

காவல்துறையினருக்கு அவர் இது குறித்து பலதடவை எழுதியுள்ளார் பல செய்தியாளர் மாநாட்டில் அவர் இது குறித்து கருத்துவெளியிட்டுள்ளார் .

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அசாத்சாலி கைதுசெய்யப்பட்டுள்ளமை முஸ்லீம் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் எப்போதும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பயங்கரவாதத்தை கண்டித்தவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து ஜஹ்ரான் மீது முதலில் குற்றச்சாட்டை சுமத்தியவர் அசாத் சாலி.

பொலிஸ்மா அதிபர் பக்கச்சார்பற்ற விசாரணையை மேற்கொண்டு அசாத்சாலிகுற்றமற்றவர் என்பது உறுதியானால் அவரை விடுதலை செய்யவேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டம் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனையவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் விடுதலை செய்யவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version