ஹோலி பண்டிகை கொண்டாட்டம்: வேளான் சட்ட மசோதாவின் நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்

735 Views

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதன் எல்லைப்பகுதியில்   விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்பினர் மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை குறித்த மசோதாவின் நகல்களை எரித்து ஹோலி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து மாபெரும் போராட்டத்தினை டெல்லி மற்றும் அதன் எல்லைப்பகுதிகளில் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவர இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போதுவரை இருதரப்பினரிடையே எவ்வித இறுதி முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதில் ஏப்ரல் 5ம் திகதி  நாடு முழுவதும் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் அலுவலகங்களை காலை 11 முதல் மாலை 5 மணி வரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா எனும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், “மத்திய அரசு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக பொது விநியோக முறையை சீர்குலைத்திட திட்டமிட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரசு, இந்திய உணவு திட்டத்திற்கான நிதியை வெகுவாக குறைத்துள்ளதுடன் பயிர்களை கொள்முதல் செய்வதற்கான விதிகளையும் மாற்றியமைத்துள்ளது. ஆகவே இந்த போராட்டத்தினை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.” என கூறியுள்ளது.

இந்நிலையில், பஞ்சாபில் விவசாயிகள் பலர் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புதிய வேளாண் மசோதாக்களின் நகல்களை எரித்து தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி ஹோலி கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.

Leave a Reply